தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு 3-வது முறையாக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை அருணா ஜெகதீசன் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கும் ரஜினி ஆஜராகாத நிலையில், இப்போது 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு வாய்வு காரணமாக   உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 2018ம் ஆண்டு  பிப்ரவரி 05, 2018ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். 


இதனையடுத்து, குமரெட்டியார்புரம்  மக்கள் மரத்தடியில் அமர்ந்து போராட்டம் செய்தனர். மே 22, 2018 அன்று நூறாவது நாளான போராட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 17 வயது பெண் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.       


இதனைத் தொடர்ந்து  ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் சென்று  பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்த மாபெரும் மக்களின் புனித போராட்டம் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது. போராட்டக்காரர்களுடன் விஷக்கிரிமிகள் சமூகவிரோதிகள் கலந்துவிட்டனர். போராட்டக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சமூகவிரோதிகளை விஷக்கிரிமிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இது போன்று போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு இருந்தால், இங்கே தொழில் நடத்த யாரும் வர மாட்டார்கள்" எனத் தெரிவித்தார். 


இப்படி கூறியிருப்பதன் அடிப்படை ஆதாரம் என்ன ? என்ற கேள்வியுயும் முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே, அருணா ஜெகதீசன் தலைமயில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. பத்திரிக்கையளர்கள், வழக்கறிஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் என 500க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் இதுவரை  விசாரணை நடத்தியுள்ளது.     


தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர். வன்முறையில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என்ற கருத்து தொடர்பாக ரஜினிகாந்த்  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் 2020 பிப்ரவரி மற்றும் 2021 ஜனவரி என இரண்டு முறை சம்மன் அனுப்பியிருந்தது. இரண்டு முறையும் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவில்லை. ரசிகர்கள் கூடுவார்கள்,  கொரோனா நோய்த் தொற்று போன்ற காரணங்கள் ரஜினியின் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டன. எனவே, தற்போது  3-வது முறையாக ரஜினிக்கு  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.       


இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர்.