வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி-20 போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான சரித்திர வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணி இன்று இரண்டாவது டி-20 போட்டியை விளையாடி வருகிறது.


செப்டம்பர் 1-ம் தேதி மிர்பூர் தேசிய மைதானத்தில் முதல் டி-20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் களமிறங்கிய டாம் ப்ளண்டல், ரச்சின் ரவிந்திரா ஆகியோர் 2,0 என சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சோபிக்காத நிலையில், ஸ்கோர் செய்ய நியூசிலாந்து அணி திணறியது. கேப்டன் டாம் லாதம், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிகோல்ஸ் மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்களை வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பினர். 






வங்கதேச அணி பெளலர்களை பொருத்தவரை, முஸ்தாஃபிசுர் ரகுமான் 3 விக்கெட்டுகளும், நசும் அகமது, ஷாகிப் அல் ஹசன், முகமது சையிஃபுதின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மெஹ்தி ஹாசன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால், 16.5 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி வெறும் 60 ரன்கள் எடுத்தது. சர்வதேச டி-20 போட்டிகளில் நியூசிலாந்து தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என முக்கிய டி-20 அணிகளை குறைந்தபட்ச ஸ்கோருக்குள் வங்கதேச அணி சுருக்கியுள்ளது கவனிக்க வைத்துள்ளது.


அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி, ஓப்பனிங்ஸ் பேட்ஸ்மேன்கள் லிட்டன் தாஸ், முகமது நைம் ஆகியோர் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஷகிப் அல் ஹசன் 25 ரன்கள் கடந்திருந்தபோது ஆட்டமிழந்தார். எனினும், 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி இலக்கை எட்டி போட்டியை வென்றது. சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் வெற்றியை, அதுவும் அதிரடியான வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேச அணி. 






இதே ஆண்டு, முன்னதாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை வென்று வங்கதேச அணி அசத்தியது. இந்த தொடரில் வெற்றி பெற்றதன் மூலம், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் தொடர், முதல் டி-20 தொடரில் வெற்றி கண்டது. அது மட்டுமின்றி, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோரை ஆஸ்திரேலியாவை சேஸ் செய்யவிடாமல் தடுத்தது.  டி-20 உலகக்கோப்பை நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 டி-20 தொடர்களையும் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.