கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல். போட்டி வரும் 9-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.


இந்த நிலையில், சமீபத்தில் அக்சர் பட்டேல் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால், அவர் சென்னைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார்.




ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது அக்சர் பட்டேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் கொல்கத்தா அணியைச் சேர்ந்த நிதிஷ் ராணா ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்சர் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது வீரர் ஆவார்.


அக்சர் பட்டேல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 97 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள அக்சர் இதுவரை 80 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.