புதுடில்லியில் இருந்து பருத்தி மற்றும் சர்க்கரையை இறக்குமதி தொடர்பாக பாகிஸ்தான் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு அளித்த பரிந்துரையை (ஈ.சி.சி) மத்திய அமைச்சரவை நிராகரித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. 


முன்னதாக  கடந்த புதன்கிழமை, இந்தியாவுடனான இறக்குமதி தடையை நீக்குவதாக பாகிஸ்தான் அறிவித்தது.   நிதி அமைச்சர் ஹம்மத் அசார் தலைமையிலான பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு  கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவை தற்போது பாகிஸ்தான் மத்திய அமைச்சரவை நிராகரித்து விட்டது.     


2019 ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இரு - நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுவின் பரிந்துரை மீண்டும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை புதுப்பிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் இணக்கமான நாடு பாகிஸ்தான் (எம்எஃப்என்) என்ற அந்தஸ்தை இந்தியா வாபஸ் பெற்றது. இதன் காரணமாக, பாகிஸ்தான் நாட்டில் இருந்து வரும் இறக்குமதிகள் மீதான சுங்க வரியை 200% ஆகவும்  இந்தியா  உயர்த்தியது.


 


முன்னதாக,  கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசு திருத்தம் செய்தது. அதன்படி, இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் உள்ள ஒருவர் அல்லது இந்தியாவில் முதலீடு செய்வதால் பலன் அடையும் உரிமையாளர் அத்தகைய ஏதாவது ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தால் அல்லது அங்கிருந்தால், அந்த நாட்டின் அரசு மூலமாகத்தான் முதலீடு செய்ய முடியும்.




மேலும் பாகிஸ்தான் குடிமகன் அல்லது  பாகிஸ்தானில் செயல்படும் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனம் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யமுடியும்.  அதிலும் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி நீங்கலாக மற்ற பிரிவுகள் / செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம்.  அயல்நாட்டு முதலீட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள் / செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.  


இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, " இம்ரான் கான் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் .