ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டி நிர்வாகிகள், வர்ணனையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து புறப்பட்டு, மாலத்தீவு சென்று கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தொடருக்கு நடுவே வீரர்கள் சிலருக்கு கொரோனா நோய் தோற்று ஏற்பட்டதால், ஐபிஎல் தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக சொந்த நாடு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கண்ட சில உலக நாடுகள், இந்தியாவை ரெட் லிஸ்ட் செய்துள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா பொருத்த அளவுக்கு மே 15-ஆம் தேதி வரை யாரும் இந்தியாவிலிருந்து பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி தாயகம் திரும்ப போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. மேலும் தங்களை நாட்டிற்குள் அனுமதிக்காதது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கடுமையான விமர்சனங்களை ஆஸ்திரேலிய அரசின் மீது முன்வைத்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கிளென் மாக்ஸ்வெல் உள்ளிட்ட 14 வீரர்களும், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், நிர்வாகிகள் என 40 பேர் இந்தியாவில் இருந்து வந்தனர். தற்போது அதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக் ஹசி தவிர்த்து மற்ற அனைவரும் மாலத்தீவு சென்றுள்ளனர்.
மே 15-ஆம் தேதி வரை பயண தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடை நிறைவடைந்த உடன் ஆஸ்திரேலிய குழுவினர் மாலத்தீவில் இருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியா செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக் ஹசியின் உடல்நிலை ?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகரான மைக் ஹசி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு லேசான நோய் தோற்று அறிகுறிகளும் இருக்கும் சூழலில், சிகிச்சை முடிந்து அவர் உடல்நலம் பெரும்வரை இந்தியாவிலேயே இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். அவரை பாதுகாப்பாக ஆஸ்திரேலியா அழைத்து வர அணைத்து முயற்சிகளையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும் என்றும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு வெளிவந்த இரண்டே தினங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.