அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
நெருக்கடியில் ஆம் ஆத்மி கட்சி:
பண மோசடி வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின், கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர், டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். இதை தொடர்ந்து, டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் மணிஷ் சிசோடியாதான்.
இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இன்று காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டார்கெட் செய்யப்படும் மூன்றாவது 'தலை':
இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய தொழிலதிபர் தினேஷ் அரோரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சஞ்சய் சிங்கின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு சஞ்சய் சிங் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
வரும் வியாழக்கிழமை பிற்பகல் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அமலாக்கத்துறை அவரை காவலில் வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ், "இது ஒரு கற்பனையான மோசடி வழக்காகும். இதில் கடந்த 15 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குறைந்தது 1,000 இடங்களில் சோதனை நடத்தியும், எங்கிருந்தும் 1 ரூபாய் கூட பறிமுதல் செய்யவில்லை. சஞ்சய் சிங்கின் வீட்டிலும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. தேர்தலில் பா.ஜ.க தோற்கிறது. இதுதான் உண்மை" என்றார்.
"ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை"
சஞ்சய் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த ஒரு வருடமாக மதுபான ஊழல் பற்றி கூக்குரல் கேட்டு வருகிறோம். 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை. 'ஊழல்' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நிறைய விசாரணை செய்தும் எதுவும் கிடைக்கவில்லை.
சஞ்சய் சிங்கின் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கப் போவதில்லை. தேர்தல்கள் வரவிருக்கின்றன. அவர்கள் (பாஜக) தோற்றுப் போவதாக உணர்கிறார்கள். எனவே இது தோல்வியடைய உள்ள தரப்பின் கடைசி முயற்சியாகத் தோன்றுகிறது" என்றார்.
ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி அளித்துள்ள பாஜக, "டெல்லி மக்களை ஆம் ஆத்மி கொள்ளையடித்துள்ளது. இந்த மதுபான கொள்கையின் மூலம் கோடிகளை ஈட்டியுள்ளார்கள்" என விமர்சித்துள்ளது.