2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்றைய நாளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10வது நாளில் குத்துச்சண்டை வீராங்கனை ப்ரீத்தி பன்வார் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு 62வது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்னும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், லோவ்லினா குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கமாவது கிடைக்கும். 


அரையிறுதியில் தோல்வியடைந்த ப்ரீத்தி: 


ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ப்ரீத்தி பன்வார், 54 கிலோ எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில் நடப்பு ஃப்ளைவெயிட் சாம்பியனான சீனாவின் சாங் யுவானிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை ப்ரீத்தி தவறவிட்டார். 






போட்டி தொடங்கிய முதல் மூன்று நிமிடங்களில் ப்ரீத்தி, ஆக்ரோஷமாகவே விளையாடி சில குத்துகளை வைத்தார். ஆனால், அதன் பின்னர், அவரது வேகம் குறைய தொடங்கியது. தொடர்ந்து, சீன வீராங்கனை அபாரமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, ப்ரீத்திக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. முதல் சுற்றில், ஐந்து நடுவர்களில் நான்கு பேர் சீன வீராங்கனைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.  இரண்டாவது சுற்றில், ப்ரீத்தி தன்னை பாதுகாத்து கொள்ள தவறினார். அப்போது, ப்ரீத்தியை தலையின் பின்பகுதியில் தாக்கியதற்காக யுவான் எச்சரிக்கையும் பெற்றார். ஆனால், கடைசி மூன்று நிமிடங்களில் தற்காப்பு ஆட்டத்தில் சீன வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 


 இறுதிப் போட்டியை எட்டிய லோவ்லினா: 






பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தாய்லாந்தின் பைசனை 5-0 என்ற கணக்கில் லோவ்லினா வென்றார். இதன் மூலம் லோவ்லினா குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தையாவது உறுதி செய்துள்ளார். இதனுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டையும் பெற்றுள்ளார்.