சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகள்:
இதில், துப்பாக்கி சூடுதல், குதிரையேற்றம் உள்ளிட்ட பல போட்டிகள் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த போட்டிகளில் இந்திய அணி இதுவரை 13 தங்கப்பதக்கங்களையும், 21 வெள்ளி மற்றும் 21 வெண்கலப்பதக்கங்கள் என்று மொத்தம் 55 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் 4 வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் ஹெப்டத்லான்(heptathlon) தடகள வீராங்கனையான ஸ்வப்னா பர்மன், தனக்கு எதிராக போட்டியிட்டு வெண்கலப்பதக்கம் வென்ற சக இந்திய வீராங்கனையான நந்தினியை ‘திருநங்கை’ என தாக்கி சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனக்கு உதவுங்கள்:
அந்த பதிவில், “சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ’திருநங்கை’ ஒருவரிடம் நான் எனது ஆசிய விளையாட்டு வெண்கலப் பதக்கத்தை இழந்துள்ளேன். இது தடகள விதிகளுக்கு எதிரானது என்பதால் எனது பதக்கம் திரும்பப் பெற வேண்டும். எனக்கு உதவுங்கள், தயவுசெய்து எனக்கு ஆதரவளிக்கவும்” என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், அந்த பதிவை ஸ்வப்னா தற்போது நீக்கியுள்ளார்.
ரசிகர்கள் கண்டனம்:
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் இந்த முறை தோல்வியுற்றதால் விரக்தியில் இவ்வாறு பேசுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற நந்தினி, இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதக்கம் வென்ற பிறகு பேசிய அவர், “ இந்திய தடகள சம்மேளனம் மற்றும் இந்திய அரசு எனக்கு அளித்த ஆதரவால்தான் என்னால் இவ்வளவு தூரம் வர முடிந்தது. இந்த பதக்கத்திற்காக எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக இந்திய அரசுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Asian Games 2023: ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. தொடர் ஓட்டப் பந்தயம்.. வெண்கல பதக்கத்தை கையில் ஏந்திய இந்திய அணி!