கிரிக்கெட் ரசிகர்களால் ’ஹிட்மேன்’ என்று அழைக்கப்படுபவர் ரோஹித் சர்மா. இவர் முதன்முதலில் கடந்த 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர். இருந்த போதிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இவரது பெயர் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது (அக்டோபர் 5 ) ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் ரோஹித் சர்மா.


இச்சூழலில் இந்த உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா முறியடிக்கக் காத்திருக்கும் சாதனைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்த  சாதனையாளர்கள்:


ரோஹித் சர்மா மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் இந்த பட்டியலில் தங்களின் பெயர்களை சமமாக பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்பை போட்டியில் ஆறு சதங்கள் அடித்துள்ளார். அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அறிமுகமான ரோஹித் சர்மாவும் இதுவரை ஆறு சதங்களை அடித்துள்ளார்.  இதில் 2019 நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மட்டும் ஐந்து சதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இச்சூழலில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா ஒரு சதம் அடித்தால்,  சச்சினின் சாதனையை முறியடித்து உலகக்கோப்பை போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். 


உலகக்கோப்பையில் அதிக ரன்கள்:


உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் உலகக் கோப்பை தொடரில் 2200 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சச்சின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், அவர் 11 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட 673 ரன்கள் எடுத்தார்.


இதனிடையே, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடிய ரோஹித் சர்மா ஐந்து சதங்கள் உட்பட மொத்தமாக 648 ரன்களை அடித்தார். இச்சூழலில் இந்த உலகக்கோப்பையில் 25 ரன்கள் அடிப்பதன் மூலம் சச்சினின் இந்த சாதனையை முறியடித்து சர்வதேச அளவில் உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை பெறுவார்.


உலகக்கோப்பை சீசனில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை:


உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது இயோன் மோர்கன் இடத்தில் உள்ளது.


2019 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணியை வழிநடத்திய இயோன் மோர்கன் அந்த தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தியவர். இவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொத்தம் 17 சிக்ஸர்களை அடித்து, 22 சிக்ஸர்களை அந்த சீசனில் பதிவு செய்தார், உலகக் கோப்பையின் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார்.


இச்சூழலில், தற்போது, ரோஹித் சர்மா உலகக் கோப்பைகளில் அதிக சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தில் உள்ளார்.  இதில் ’யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படக்கூடிய, கிறிஸ் கெய்லும் இடம் பிடித்து உள்ளார். இதனிடையை இந்த உலகக்கோப்பையில் அதிக  சிக்ஸர்கள் அடிப்பதன் மூலம் இந்த சாதனை பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடிப்பார்.


உலகக் கோப்பையை வெல்லப்போகும் 3வது இந்திய கேப்டன் என்ற சாதனை:


இதற்கு முன்னதாக இந்த சாதனை பட்டியலில் கபில் தேவ் (1983) மற்றும் எம்.எஸ்.தோனி (2011) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இச்சூழலில் இந்தியாவில் நடைபெற இருக்கும் நடப்பு உலக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கிறார். இவரது தலைமையிலான அணி கோப்பையை வென்று கொடுக்கும் பட்சத்தில் உலகக்கோப்பையை வென்று கொடுத்த மூன்றாவது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்து இந்திய ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடிப்பார் ரோஹித் சர்மா.