சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. நீச்சல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கிரிக்கெட், ஹாக்கி என பல வகையான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய வீரர்கள் தாங்கள் பங்கேற்ற போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை:
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுக வீராங்கனையாக இந்தியாவின் அன்டிம் பங்கல் களமிறங்கினார். மல்யுத்த வீராங்கனையான அன்டிம் மகளிர்களுக்கான 53 கிலோ கிராம் ஃப்ரீஸ்டைல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வெண்கலப் பதக்கத்திற்காக நடந்த மோதலில் இந்தியாவின் அன்டிம் பங்கல், மங்கோலியாவின் போலோர்டுயா பாட் ஓசீரை எதிர்கொண்டனர். இவர்கள் இருவரும் ஏற்கவே உலக சாம்பியன்ஷிப்பில் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர்.
19 வயது:
இந்த போட்டி தொடங்கியது முதலே அன்டிம் பங்கல் சிறப்பாக ஆடினார். இறுதியில் அவரை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார். 53 கிலோ கிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற இந்த மல்யுத்த போட்டியில் அன்டிம் பங்கல் சிறப்பாக விளையாடி அசத்தியதால் இந்த வெண்கலம் வசமானது. அன்டிம் ஆரம்பத்திலே தனது காலால் மங்கோலிய வீராங்கனையை மடக்கிப்பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவர் அன்டிமின் பிடியில் இருந்து தப்பிவிட்டார்.
ஆனாலும், அடுத்தடுத்து அன்டிமின் அபார ஆட்டத்தால் மங்கோலியா வீராங்கனை அவரிடம் தோல்வியை தழுவினார். 19 வயதே நிரம்பிய அன்டிமின் இந்த வெற்றிக்கு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பதக்கப்பட்டியல்:
தற்போதைய நிலவரப்படி, இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 21 தங்கத்துடன் 4வது இடத்தில் உள்ளது. மேலும், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளது. மொத்தம் 86 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
மொத்தமாக இந்த தொடரை நடத்தும் சீனா 176 தங்கம், 96 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 325 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 40 தங்கம், 51 வெள்ளி மற்றும் 59 வெண்கலம் என மொத்தம் 150 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் கொரியா உள்ளது. கொரியா 33 தங்கம், 47 வெள்ளி, 74 வெண்கலம் என மொத்தம் 154 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது முதலே இந்திய வீரர்களும், இந்திய வீராங்கனைளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தொடர் வரும் 8-ந் தேதி வரை நடைபெறும் என்பதால் இந்தியா 100 பதக்கங்களை இந்த தொடரில் வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க: Madurai: சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
மேலும் படிக்க: Asian Games 2023: குவியும் தங்கம்; இது நம்ம காலம்! வில்வித்தையில் எதிரணியினருக்கு வித்தை காட்டிய இந்திய வீரர்கள்!