தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் வயது 30.  இவர் படப்பை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி வயது 23 என்பவருக்கு பெற்றோர்களால் நிச்சயித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. காயத்ரி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஐ. டி நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணி செய்து வருகிறார்.

 

மனைவி காயத்ரி துப்பட்டாவில் தற்கொலை 

 

கணவன், மனைவி இருவரும் திருமணத்துக்கு பின் மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை தாம்பரம் அடுத்துள்ள பெருங்களத்தூர், புத்தர் தெரு என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.  திருமணமான நான்கு மாதத்திற்குள் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு சென்ற சரவணன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் மனைவி காயத்ரி துப்பட்டாவில் தற்கொலை செய்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி உள்ளார்.

 

கணவன், மனைவி இருவரும் தற்கொலை 

 

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் இவரது வீட்டிற்கு விரைந்து, வந்து பார்ப்பதற்குள் இவரும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் பீர்க்கங்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பிரேதங்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

பெற்றோருக்கு தெரிந்தால் கஷ்டப்படுவார்கள்

 

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரவணனுக்கு மது உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களின் பழக்கம் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு தனக்கு எந்த பழக்கமும் இல்லை என தெரிவித்து வந்துள்ளார். இதன் காரணமாகவே இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் தனது கணவனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரிந்தால் கஷ்டப்படுவார்கள் என காயத்ரி எழுதிய தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Suicidal Trigger Warning

 

 

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)