Asian Hockey Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரில் இதுவரை இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்து காணலாம், 


2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின. 




போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா  அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு  செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன. 


ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா உள்ளது. இதுவரை 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் டிராவும் செய்துள்ளது. 




அதாவது இந்திய அணி தனது முதல் போட்டியில் சீனாவை எதிர்க்கொண்டு கோல் மழை பொழிந்தது. சீனாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஒரு போட்டியில் இதுவரை ஒரு அணி அடித்த அதிகபட்ச கோல் இதுதான். 


வலுவான இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானை ஆகஸ்ட் 4ஆம் தேதி எதிர்கொண்டது. அந்த போட்டில் இந்திய அணிக்கு ஜப்பான் அணி சிறப்பான எதிர் ஆட்டத்தை ஆட, இந்திய அணி வெற்றியை இழந்து போட்டியை டிரா செய்தது. இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில், மலேசியாவை எதிர் கொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதல் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியதால், இந்த போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 




இந்திய அணி தனது நான்காவது போட்டியில், நடப்புச் சாம்பியன் சௌத் கொரியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி சௌத் கொரியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி தகுதி பெற்றது. 


இந்திய அணி ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த போட்டி பாகிஸ்தான் அணியுடனான போட்டிதான். பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டும்தான் அந்த அணியால் அரையிறுதிக்கு தகுதி பெறமுடியும் எனும் நிலையில் களமிறங்கியது. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெளுத்து வாங்கியது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மட்டும் 2 கோல்கள் அடித்தார். அதேபோல், இந்திய அணி மொத்தமாக 4 கோல்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி ஒருகோல் கூட அடிக்கமுடியாமல் படுதோல்வி அடைந்தது. 


இந்த தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும் இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 20 கோல்கள் அடித்துள்ளது. இந்திய அணியை எதிர்த்து 5 கோல்கள் மட்டும் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் கோல் வித்தியாசம் +15ஆக உள்ளது. இந்திய அணி கோப்பையை வெல்ல, இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இரண்டு போட்டிகளில் வென்று கோப்பையை இந்திய அணி தனதாக்கும்பட்சத்தில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்திய நாடே கோப்பையை வென்ற நாடு என்ற பெருமையைப் பெறும்.