கரூர் மாநகரில் நான்கு திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ரஜினியின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் மற்றும் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உலகம் முழுவதும் 169 வது திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது. கரூர் மாநகரில் அமைந்துள்ள கலையரங்கம், திண்ணப்பா, அமுதா, எல்லோரா ஆகிய நான்கு திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது. ஜெயிலர் படம் ரிலீசாகும் திரையரங்குகள் முன்பு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், திரையரங்குகள் முன்பு ஆள் உயர பிளக்ஸ் பேனர்கள் வைத்து அதில் நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கரூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அமுதா திரையரங்கத்திற்கு மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் வீல் சேரில் படத்தை காண்பதற்காக வந்தார். வீட்டில் இருந்து ஆட்டோவில் வந்த அவரை ரஜினி ரசிகர்கள் வீல் சேரில் அமர வைத்து தியேட்டருக்குள் அழைத்துச் சென்றனர். ஸ்ரீகாந்த் என்ற மாற்றுத்திறனாளியான அந்த ரசிகர் தியேட்டருக்குள் உள்ளே செல்லும்போது ஹுக்கும் என்று கூறிவிட்டு உள்ளே சென்றார். இது ரஜினி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் ஜெயிலர் திரைப்படம் 45 கோடி மதிப்பீட்டில் திரைப்பட நுழைவு சீட்டு விற்பனையாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜெய்லர். இந்த படம் 2022 பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக தலைவர் 169 என்ற பெயருடன் அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் கதை ஒருநாள் இரவில் நடப்பதாக தகவல் வெளியானது. நெல்சன் இந்த படத்தில் ரஜினியுடன் நிறுத்தவில்லை. மேலும் பல நடிகர்களையும் இணைத்திருக்கிறார். மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கிலிருந்து சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, பாலிவுட்டிலிருந்து ஜாக்கி ஷெரிப் என பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது.