ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான ஹாக்கி தொடர் கடந்த 3ஆம் தேதி கோலாகளமாக சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சௌத் கொரியா, சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின. இந்த தொடரில் தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து அரையிறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா ஜப்பானையும், மலேசியா சௌத் கொரியாவையும் எதிர்கொள்ளவுள்ளது. நாளை நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் 5வது மற்றும் 6வது இடத்திற்காக சீனா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 


இதற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது டிரா செய்திருந்தாலோ மூன்று முறை கோப்பையை வென்ற பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 






இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத அணி என்ற பெருமைக்கு ஆளாகியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர், இந்திய அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர நாயகன் ஹர்மன்ப்ரீத் சிங் தனது வலது கரத்தை ஆக்ரோஷமாக உயர்த்தி கொண்டாடினார். 


இந்த புகைப்படத்தையும் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்ற பின்னர் இந்திய அணியின் வீரர் விராட் கோலி தனது வலது கரத்தை ஆக்ரோஷமாக உயர்த்தியதையும் இணைத்து இந்திய ஹாக்கி சம்மேளனம் ட்வீட் செய்துள்ளது. அதில் விளையாட்டு மாறுபடலாம் ஆனால் நோக்கமும் ஆர்வமும் போட்டியின் முடிவும் ஒன்றுதான் என கேப்ஷனிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. 


பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணியின் தூணாக விராட் கோலி, ஒற்றை ஆளாக நின்று கெத்து காட்டினார். அன்றைய போட்டியில் 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார். 2021ஆம் ஆண்டு தனது தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடனான தோல்வியை, இந்தாண்டு பழி தீர்த்தார் என பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 


19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் பேக் டூ பேக் சிக்ஸர் அடித்து அசத்தினார் கோலி. மிகவும் விறுவிறுப்பாக கடைசிவரை சென்ற இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன், பெவிலியனில் இருந்த இந்திய அணி வீரர்கள், உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்றனர். மைதானத்திற்கு உள்ளே வந்த ரோகித், கோலியை தூக்கி சுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.