ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின.
லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி முடிவில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஜப்பான் மற்றும் சௌத் கொரியா அணிகள் மூன்றாவது இடத்துக்கு போட்டியிட்டது.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் விறுவிறுப்பாக செயல்பட்டனர். ஆனால் முதல் சுற்று தொடங்கி 3வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. இதையடுத்து போட்டி மிகவும் பரபரப்பானது. போட்டி தொடங்கியதில் இருந்து முதல் சுற்று முடிவடையும் வரை தூரல் மழை பொழிந்துகொண்டே இருந்ததால், வீரர்கள் மிகவும் உற்சாகமாகவும் விளையாடினர். முதல் சுற்றின் 9வது நிமிடத்தில் ஜப்பான் அணி மற்றொரு கோல் அடிக்க, கொரிய அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.
ஆனால், முதல் சுற்று முடிவடையும் போது கொரிய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடிக்க, கொரிய அணியினருக்கு ’அப்பாடா’ என்பது போல் ஆனது. இதையடுத்து இரண்டாவது சுற்றில் கொரிய அணி மற்றொரு கோல் அடிக்க போட்டி சமநிலைக்கு வந்தது. இதனால் கொரிய அணியினர் துள்ளிக்குதிக்க, அடுத்த சில நிமிடங்களில் ஜப்பான் அணி தனது மூன்றாவது கோலை சிறப்பாக அடித்து போட்டியில் மீண்டும் லீடிங் பொஷிசனுக்குச் சென்றது. இரண்டாவது சுற்று முடிவில் போட்டி 3-2 என்ற நிலைக்கு வந்தது.
அதன் பின்னர், போட்டியில் அனல் பறக்க ஆரம்பித்தது. மூன்றாவது சுற்று தொடங்கிய சிறுது நேரத்தில் கொரிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதனை அட்டகாசமான முறையில் கோலாக மாற்றி போட்டியை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தது கொரியா. மூன்றாவது சுற்றில் மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெரும் பரபரப்புக்கு மத்தியில் இறுதிச் சுற்று தொடங்கியது.
இரு அணிவீரர்களும் மிகவும் ஆக்ரோசமாக ஆடிக்கொண்டு இருந்த இறுதிச் சுற்றில் யார் கோல் அடிப்பார் என ரசிகர்களை இருக்கையின் நுணிவரை வரவழைத்துவிட்டது. இறுதிச் சுற்றின் 53வது நிமிடத்தில் ஜப்பான் 4வது கோலை அடிக்க, அதற்கு அடுத்து கிடைத்த ஷூட்-அவுட் வாய்ப்பையும் கோலாக மாற்ற, போட்டியில் ஜப்பான் அணி 5 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது.
இறுதியில் ஜப்பான் அணி 5 கோல்களும் சௌத் கொரியா அணி 3 கோல்களும் அடித்திருந்ததால், ஜப்பான் அணி 2 கோல்கள் வித்தியாசத்தில் போட்டியுடன் மூன்றாவது இடத்தையும் வென்றது.