ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா பலமான சீனாவை எதிர்கொள்ளவுள்ளது.  சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இந்த போட்டித்தொடர் நடக்கவுள்ளது. இந்தப் தொடரில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா என மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கும் தொடர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்காக சென்னைக்கு இந்திய அணி உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் முகாமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. 


2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர், முதல் மூன்று ஆண்டுகள் அதாவது 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகள் ஆசிய ஹாக்கி தொடர் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2016-ஆம் ஆண்டு தொடர் நடத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் நடத்தப்படுகிறது. 2016 மற்றும் 2018-ஆம் ஆண்டு தொடர் நடத்தப்பட்டது.


2020-ஆம் ஆண்டு கொரோனா காலமாக நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக 2021-ஆம் ஆண்டு தொடர் நடத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு அதாவது 2023-ஆம் ஆண்டு தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை மொத்தம் 6 தொடர்கள் வெற்றி கரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணி அதிக முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அணியாகும். 


இதுவரை கோப்பைகளை வென்ற அணிகள் மற்றும் இரண்டாவது இடம் பிடித்த அணிகள் எது என தெரிந்து கொள்ளலாம். 


அறிமுகத் தொடரில் அதாவது 2011ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4- 2 என்ற கணக்கில் கோப்பையை தட்டிச்சென்றது.  2012- ஆம் ஆண்டு தொடரில் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் அணிகளே நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதியது. அந்த போட்டியில், 5-4 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி இந்தியாவை பழிதீர்த்துக்கொண்டதுடன் கோப்பையையும் தனதாக்கியது. 


2013-ஆம் ஆண்டும் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஜப்பானை எதிர்கொண்டது.  3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி ஜப்பான் அணியை ஊதித்தள்ளியது. இதனால் தொடர்ந்து இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது. 


2016 ஆண்டு தொடரில் மீண்டும் இந்தியா பாகிஸ்தானே மோதிக்கொள்ள, விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தி இரண்டாவது கோப்பையை கைப்பற்றியது. 


2018-ஆம் ஆண்டும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள, இம்முறை முடிவு எட்டப்படாததால், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. 


2021-ஆம் ஆண்டுதான் இந்தியா அல்லது பாகிஸ்தான் இல்லாத அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதாவது தென்கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் தென்கொரியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் முதல் முறையாக கோப்பையை தனதாக்கியது. 


இந்திய ஆண்கள் ஹாக்கி அணி (2011, 2016 & 2018) மற்றும் பாகிஸ்தான் (2012, 2013 & 2018) ஆகிய இரண்டும் தலா மூன்று கோப்பையை வென்றுள்ளன. இதனால் இம்முறை கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்ற ஆவல் ஹாக்கி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.