திருவண்ணாமலை ( Tiruvannamalai News): நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளிநாடு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் காணப்படுகிறது. மேலும் பெளர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலின் உள்ளே கூட்டம் அலைமோதும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்கள் கார்த்திகை தீபம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் ஆகும். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள, உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


 





 


ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாள் 


விழாவையொட்டி கடந்த 22-ந் தேதி முதல் இன்று வரை காலை மற்றும் மாலையில் விநாயகர், பராசக்தி அம்மன் வீதியுலா நடைபெற்றது. மேலும் கடந்த 22-ந் தேதியன்று மாலையில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், அன்று நள்ளிரவு தீமிதி திருவிழாவும் நடந்தது. ஆடிப்பூர பிரம்மோற்சவ நினைவுநாள் என்பதால் அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்டமலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.




பராசக்தி அம்மன் வடிவ சூளத்திற்கு தீர்த்தவாரி 


பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுவாமி வலம் வந்து சிவகங்கை தீர்த்த குளத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபமான பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமங்கல மந்திரங்கள் முழுங்க வேத வாத்தியங்களுடன் சூலத்திற்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், மூலிகை அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றது. பிறகு சூளத்திற்கு சிறப்பு ஆராதனை நடைப்பெற்றது. பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமாண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.