ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னையில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் தேசிய ஹாக்கி அணிக்கு NOC (ஆட்சேபனை இல்லை) வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஹாக்கி அணி ஆகஸ்ட் 3ம் தேதி மலேசியாவிற்கு எதிராக தங்கள் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றனர். மேலும், வருகின்ற ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாகிஸ்தான் அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


தனியார் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி,  கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தில் செயலாளர் ஹைதர் ஹூசைன் விளையாட்டு வாரியம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து NOC  பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினார். 


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ உள்துறை அமைச்சகத்திடம் இருந்து NOC (ஆட்சேபனை இல்லை) கடிதம் வாங்கிவிட்டோம். இதன் காரணமாக, நாளை எங்கள் அணி வாகா எல்லை வழியாகப் புறப்பட்டு அமிர்தசரஸுக்குச் செல்லும், அங்கிருந்து அவர்கள் சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.” என்றார். 


இருப்பினும், பாகிஸ்தான் ஹாக்கி அணியில் இன்னும் மூன்று பேர் இன்னும் NOC களைப் பெறவில்லை மற்றும் அவர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தபோது பயிற்சியாளராக இருந்த ஷானாஸ், அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் என்ஓசி பெறவில்லை என்று கூறப்படுகிறது. 


2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணி


முஹம்மது உமர் பட்டா (கேப்டன்), அக்மல் ஹுசைன், அப்துல்லா இஷ்தியாக் கான், முஹம்மது அப்துல்லா, முஹம்மது சுஃப்யான் கான், எட்ஷாம் அஸ்லம், ஒசாமா பஷீர், அகில் அகமது, அர்ஷத் லியாகத், முஹம்மது இமாத், அப்துல் ஹனான் ஷாஹித், ஜகாரியா ஹயாத், ராணா அப்துல் வஹீத் அஷ்ரஃப் (துணை கேப்டன் ), ரோமன், முஹம்மது முர்தாசா யாகூப், முஹம்மது ஷாஜைப் கான், அஃப்ராஸ், அப்துல் ரஹ்மான், காத்திருப்பில் அலி ராசா, முஹம்மது பகீர், முஹம்மது நதீம் கான், அப்துல் வஹாப், வக்கார் அலி, முஹம்மது அர்சலான் மற்றும் அப்துல் கயூம்


கடந்த ஜூலை 29ம் தேதி சென்னை வந்தடைந்த மலேசியா அணி வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. அதேபோல், நடப்பு சாம்பியன் கொரியா ஹாக்கி அணியும், கடந்த பதிப்பில் இரண்டாம் இடம் பெற்ற ஜப்பான் ஹாக்கி அணியும் நேற்று இரவு சென்னைக்கு வந்தடைந்தனர். 


சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இரு அணிகளுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. . கொரியா பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டும் என்றும், ஜப்பான் டிராபியை வெல்ல முயற்சிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஜப்பானை எதிர்கொள்கிறது கொரியா.