மாரி செல்வராஜ் இயக்கத்தில்  வடிவேலு. ஃபகத் ஃபாசில் , உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 29-ஆம் தேதி வெளியானத் திரைப்படம் மாமன்னன். தமிழகத்தின் மேற்கு மாவட்ட அரசியலை மையமாக கொண்டு சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஒரு தந்தை மகன் உறவு வழியாக பேசிய மாமன்னன் திரைப்படம்.  


மேலும் இந்தப் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பு அனைவரையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது மாமன்னன் திரைப்படம்.


டிரெண்டான மாமன்னன்


இணையதளத்தின் வெளியான நாள் முதல் நெட்ஃப்ளிக்ஸில் முதல் இடத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது மாமன்னன் திரைப்படம். இதற்கு பாதி காரணம் படத்தின் ரசிகர்கள் என்றால், மீதிக் காரணம் சாதிய மனப்பான்மைக் கொண்ட ஒரு பெரிய குழு.


சமீப காலமாக மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த நடிக ஃபகத் ஃபாசிலை டிரெண்டாக்கி வருகிறார்கள் சிலர். எந்த ஒரு  குறிப்பிட்ட சாதி என்று இல்லாமல் தமிழகத்தில் பெரும்பாலான இடைநிலை  சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சாதிய பாடல்களுடன் எடிட் செய்து இணையதளத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.


சாதியத்திற்கு எதிராக  பேசும் மாமன்னன் மற்றும் மாரி செல்வராஜின் முயற்சியை நீர்த்துப்போகச் செய்யவே இந்த முயற்சிகள் நடக்கின்றன என்று பார்க்கும் யார்வேண்டுமானாலும் ஊகிக்கலாம். அதே நேரத்தில் மாரி செல்வராஜ நேர்மையாக உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்தை அவருக்கு எதிரான  ஒரு அடையாளமாக மாற்றுவதன் மூலம் தங்களது சாதி வெறியை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். எப்போதும் போல் தங்களுக்கு ஆதரவாக இவர்களை ஊக்குவிக்கும் திரைப்பிரபலங்களும் இருக்கவே செய்கிறார்கள்.


ஃபகத் ஃபாசிலை இயக்க மோகன் ஜிக்கு கோரிக்கை..


சாதிய மனப்பான்மைக்கு எதிராக ஒருவர் படம் எடுத்தால் சாதியத்தை ஆதரிக்கும் வகையில் படம் எடுப்பதாக விமர்சிக்கப்படுபவர் மோகன் ஜீ. நம்ம ஆளு ஒருத்தர் சினிமாவில் இருக்கிறார் என்று சிலர் இவரது பெயரை சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதும் உண்டு. மோகன் ஜீ எடுத்தது என்னமோ மூன்று படங்கள்தான். எந்தப் படம் வெளியானாலும் அதே மாதிரி ஒரு படத்தை தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்க வேண்டும் என்று மோகன் ஜியிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள் . தற்போது ஃபகத் ஃபாசிலின் நடிப்பையும், ஒரு ஆதிக்க சாதியில் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்தைப் பார்த்ததும் இவர்களுக்கு ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது.


வட தமிழகத்தின் அதிரடியான வாழ்வியலா?


ஃபகத் ஃபாசிலை வைத்து வட தமிழகத்தின் அதிரடி அரசியலை வைத்து மோகன் ஜி படம் எடுத்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் நின்னு பேசும் என்று மோகன் ஜி யின் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த மோகன் ஜீ  அந்தப் பதிவை ஆமோதிக்கும் வகையில் மகிழ்ச்சியாக சிரிக்கும் எமோஜியை பதிலாக கூறியுள்ளார். இந்த விஷயம் ஃபகத் ஃபாசிலுக்கு தெரியுமா ஜீ?