2023 ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இன்று இரவு சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி:
2023 ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபியில் இதுவரை நடந்த லீக் போட்டியில் தோற்கடிக்கப்படாத ஒரே அணியாக இந்திய அணி உள்ளது. 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், ஒரு போட்டியை டிராவும் செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசியாக, கடந்த புதன்கிழமை நடைபெற்ற கடைசி லீக் போட்டியிலும் பாகிஸ்தானை இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனால், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஜப்பான்:
இந்த லீக்கில் ஜப்பான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்வி மற்றும் 2 டிரா செய்து புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தது. ஜப்பான் தனது கடைசி லீக் போட்டியில் சீனாவுக்கு எதிராக வெற்றிபெற்றது. இதுவே ஜப்பான் அணி பெற்ற ஒரே வெற்றியாகும்.
ஹாக்கி உலக தரவரிசையில் இந்திய அணி 4வது இடத்திலும், ஜப்பான் அணி 19வது இடத்திலும் உள்ளன. இந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணி 20 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் ஏராளமான வாய்ப்புகள் இந்திய அணிக்கு கிடைத்தும் அதை வீணடித்தனர்.
இந்தியா vs ஜப்பான் போட்டி விவரம்:
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 அரையிறுதி: இந்தியா vs ஜப்பான்
- எப்போது: வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2023
- நேரம்: இரவு 8.30 மணி
- நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
- லைவ் ஸ்ட்ரீமிங்: ஃபேன்கோட்
- இடம்: சென்னையிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம்
இதுவரை நேருக்கு நேர்:
ஹாக்கியில் இந்திய அணியும் ஜப்பான் அணியும் 2018ம் ஆண்டு முதல் 11 முறை நேருக்குநேர் சந்தித்துள்ளது. அதில், ஒரு உலகக் கோப்பை வெற்றி உட்பட இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. அதேபோல், ஜப்பான் 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.
2021 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பான் அணியிடம் 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் 93 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், அதிகபட்சமாக இந்திய அணி 82 போட்டிகளிலும், ஜப்பான் அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
விளையாடிய போட்டிகள்: 93
இந்தியா: 82
ஜப்பான்: 6
டிரா: 5
போட்டி கணிப்பு: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ஜப்பானை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
ஜப்பான்
கென்டாரோ ஃபுகுண்டா, செரன் தனகா, ரியோசி கட்டோ, ஓகா ரியோமா, தகாஷி யோஷிகாவா, யமடோ கவாஹாரா, கைடோ தனகா, டைகி தகடே, கோசி கவாபே, மசாகி ஒஹாஷி, ஷோட யமடா.
இந்தியா:
சுக்ஜீத் சிங், கிரிஷன் பதக், ஜர்மன்ப்ரீத் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், சம்ஷேர் சிங், மன்தீப் சிங், ஹர்திக் சிங், ஆகாஷ்தீப் சிங், வருண் குமார்.