Asian Champions Hockey Final INDIA VS MALAYSIA: 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில்,  மலேசியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி:


2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இதன் இறுதிப்போட்டியில் ஏற்கனவே 3 முறை சாம்பியனான இந்தியாவும், முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மலேசிய அணியும் மோதின.


த்ரில் வெற்றி:


போட்டியின் முதல் கோலை இந்திய அணி அடித்தாலும், மலேசிய அணி ஆக்ரோஷ விளையாட்டை வெளிப்படுத்தி இரண்டாவது சுற்றின் முடிவில் 3-1 என்ற க்ணக்கில் முன்னிலை பெற்றது.  இதையடுத்து மூன்றாவது சுற்றின் இறுதி நிமிடங்களில் இந்திய அணி தனக்கு கிடைத்த ஷூட் அவுட் முறையில் ஒரு கோலும் பரபரப்பான தருணத்தில் மற்றொரு கோலும் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தது.


இறுதி சுற்றில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவ, போட்டியின் 56வது நிமிடத்தில் இந்திய அணி தனது 4வது கோலை அடித்தது. இதன் மூலம், த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.


கோப்பையை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்:


வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். அதோடு, இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சமும், அணியில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.


அதோடு, இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 லட்சமும், ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


மற்ற பரிசு விவரங்கள்:


போட்டியின் சிறந்த கோல் (ரசிகர்கள் தேர்வு): கார்த்தி செல்வம் (இந்தியா) -  1000 அமெரிக்க டாலர்கள்


போட்டியில் அதிகபட்ச அணி கோல்கள்: இந்தியா - 29 கோல்கள் - 1000 அமெரிக்க டாலர்கள்


போட்டியின் வளர்ந்து வரும் வீரர்: அப்துல் ஷாஹித் ஹன்னான் (பாகிஸ்தான்) - 1000 அமெரிக்க டாலர்கள்


போட்டியின் சிறந்த ரைசிங் கோல்கீப்பர்: டகுமி கிடகாவா (ஜப்பான்) -  1000 அமெரிக்க டாலர்கள்


போட்டியின் சிறந்த கோல்கீப்பர்: கிம் ஜேஹியோன் (கொரியா) - 1000 அமெரிக்க டாலர்கள்


போட்டியின் அதிக கோல் அடித்தவர்: ஹர்மன்ப்ரீத் சிங் (இந்தியா) - 1000 அமெரிக்க டாலர்கள்


தொடர் நாயகன்: மன்தீப் சிங் ( இந்தியா) - 2000 அமெரிக்க டாலர்கள்