Asian Champions Trophy 2023 Final: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி:
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா ஆகிய அணிகள் களமிறங்கின.
போட்டி தொடர்:
போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதைதொடர்ந்து, 5வது இடத்திற்கான போட்டியில் சீனாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இன்று இறுதிப்போட்டி:
இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்று மலேசிய அணிகள் மோத உள்ளன. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பங்கேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 4 வெற்றி மற்றும் 1 டிராவுடன், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. மலேசிய அணி 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. இரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், இந்திய அணி 5-0 என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
4வது முறையாக பட்டம் வெல்லுமா இந்திய அணி:
ஏற்கனவே ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி 2011, 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே சமயம் மலேசியா அணி முதல் முறையாக இறுதிச்சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால், இந்த முறையும் சாம்பியன் பட்டம் வெல்லும் என இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே இன்று நடைபெற உள்ள நான்காவது இடத்திற்கான போட்டியில் ஜப்பான் மற்றும் தென் கொரியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.
அரையிறுதியில் இந்திய அணி:
இதனிடையே, நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென் கொரியா அணியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக மலேசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.