ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
டெல்லியில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் வெற்றியாளர் கோப்பை வெளியிடப்பட்டு, தற்போது தமிழ்நாடு முழுவதும் பார்வைக்காக வலம் வருகிறது.
முன்னதாக, நேற்று ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இந்தநிலையில் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட் விலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த டிக்கெட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எப்படி வாங்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
போட்டியை நடத்தும் இந்தியாவை தொடர்ந்து, ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனா அணிகள் உள்ளன. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆகஸ்ட் 3ஆம் தேதி சீனாவுக்கு எதிராக தனது முதல் லீக் போட்டியில் களமிறங்குகிறது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 4ஆம் தேதி ஜப்பானுடனும், 6ஆம் தேதி மலேசியாவுடனும், அதன் பிறகு கொரியாவுடனும் இந்திய அணி மோதுகிறது.
மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெறுகிறது.
அரையிறுதி போட்டிகள்:
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் அரையிறுதி ஆட்டம் ஆகஸ்ட் 11 ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஆகஸ்ட் 12 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.
டிக்கெட் விலை:
மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தின் கிழக்கு ஸ்டாண்ட் - பிளாக் ஏ மற்றும் ஈஸ்ட் ஸ்டாண்ட் - பிளாக் பி ஆகியவற்றுக்கான ஒரு டிக்கெட்டின் விலை 400 ரூபாய்.
சவுத் ஸ்டாண்ட் - பிளாக் A மற்றும் பிளாக் B ஆகியவற்றில் ஒரு டிக்கெட்டின் விலை 300 ரூபாய்.
இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வாங்கலாம். போட்டி நடைபெறும் நாளில் ஸ்டேடியத்தில் இருந்து ஆஃப்லைன் டிக்கெட்டுகளையும் வாங்கலாம். அதேசமயம் ஆன்லைன் டிக்கெட்டுகள் Ticketgenie இணையதளத்தில் விற்கப்பட இருக்கிறது.
போட்டியை எங்கே பார்ப்பது..?
அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும், அதே நேரத்தில் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
இந்திய அணி இதுவரை 3 முறை ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது.