கடந்த ஆண்டு கபா டெஸ்டில் இந்தியா பெற்ற வெற்றி, மறக்க முடியாத வெற்றியாக உள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.


கேப்டன் விராட் கோலி, முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹனுமான் விஹாரி ஆகியோர் இல்லாத போதிலும், ஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளுக்கு பின் அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்திய முதல் அணியாக இந்தியா உள்ளது.


ஒரு அனுபவமற்ற இந்திய அணி வென்றது என ஆச்சரியம் அனைவருக்கும் உள்ளது. அதே வேளையில், அஷ்வின் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு இருந்த ஒரு ஆழமான உணர்ச்சிகரமான கதையை வெளிப்படுத்தியுள்ளார்.



கோவிட்-19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதால் ஹோட்டலில் சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ப்ரித்தி மன ரீதியாக அழுத்தத்துக்கு உள்ளானதாக அஷ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.


இது குறித்து அஷ்வின் கூறுகையில், “பயணம் செய்வது எவ்வளவு கடினம் என்பது என் மனைவிக்கு நன்றாகவே தெரியும். அவர் இதை 10 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார். பிரிஸ்பேனில் நாங்கள் இறங்கியதும், எங்களை ஒரு ஹோட்டல் அறையில் வைத்து, ‘நீங்கள் போக முடியாது” என்று சொன்னார்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அழுகைச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. ஆனால் அது என் குழந்தைகளிடமிருந்து இல்லை. நான் அந்த அறைக்கு சென்று பார்த்தால் எனது மனைவி அழுது கொண்டிருந்தார்.


நான் என்னவென்று கேட்டதற்கு அவர் கூறியது, “என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னால் இனி இந்த ஹோட்டல் அறைகளில் இருக்க முடியாது.  நீங்கள் பயிற்சி எடுக்க வெளியே செல்கிறீர்கள், ஆனால் நான் இந்த அறையிலேயே இருக்க வேண்டும். இது மிகவும் சிரமமாக உள்ளது. உங்கள் மேல் கொண்ட அன்பால் வெளியே வந்தேன். ஆனால் அறையில் அடைந்தே கிடப்பதை என்னால் செய்ய முடியாது” என அஷ்வின் மனைவி தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது குறுகிய கால வாழ்க்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில்  தியாகம் செய்ய வேண்டும். என் குடும்பத்தில் நான் ஒரே மகன்.  27 வருடங்களாக நான் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ வீட்டுக்கு சென்றதில்லை.  எனது பெற்றோர் கொரோனா தொற்றால் 6 மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஏழு மாதங்களாக நான் அவர்களைப் பார்க்க கூட இல்லை. இந்தியாவில் எல்லாவற்றையும் விட கிரிக்கெட் என்பது ஒரு பெரிய உணர்ச்சி.  ஆனால் குடும்ப உணர்வு என்பது நாம் அனைவருக்குமான ஒன்று" என்று அஷ்வின் கூறினார்.


சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அஸ்வின் கப்பா டெஸ்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  காயம் இருந்தபோதிலும், அஷ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டார்.  அவர் மூன்று ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள் பெற்று இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.