கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், வயது 40. தனியார் வங்கியில் பணிபுரியும் மணிகண்டனுக்கு, கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தாரா ( 36 ) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. மணிகண்டன் சென்னை அடுத்துள்ள போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். தாரா, மணிகண்டன் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் (தரன், தாகன்) சென்னை அடுத்துள்ள பெருங்குடி பெரியார் சாலை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளனர். 

 



இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மணிகண்டனுக்கு தொடர்ந்து கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மணிகண்டன் சுமார் 15 லட்ச ரூபாய் அளவிற்கு கடன் பெற்றதுடன், அதைத் திருப்பி அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும்  மணிகண்டன் கடந்த இரண்டு மாதங்களாக சரிவர வங்கிப் பணிக்கு செல்லாமல் கடன் பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்ததும், முறையாக வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

 



இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் சண்டை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மணிகண்டன், கோபத்தில் கிரிக்கெட் மட்டையால் மனைவி தாராவை அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இரு மகன்களையும் தலையணையால் அழுத்தி கொலை செய்த மணிகண்டன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இன்று காலையில் இருந்தே அவர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து யாரும் வெளியே வராமல் இருந்தால் அருகிலிருந்த, அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அவர்களின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
  

 



நீண்ட நேரம் கதவு தட்டப்பட்டும், திறக்காத காரணத்தினால் கதவை உடைத்து பார்த்தபோது, வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பெரும் உயிரிழந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட 4 சடலங்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்சனையால் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .