ரோகித் ரசிகரை விராட் ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் சரளமாக பேசுவதில் சிக்கல் உள்ளதை (திக்குவாய்) கிண்டல் செய்தது தான் கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 


விராட்கோலி மற்றும் ரோகித்சர்மா இருவரும் இந்திய அணியின் தற்போதைய சிறந்த கிரிக்கெட் வீரர்கள். மேலும் இந்த கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் இருவரில் யார் சிறந்தவர் என்பதைப் பற்றி சமூக ஊடகங்களில் நாளுக்குநாள் விவாதித்து வருவது வாடிக்கைதான்.  


கடந்த காலத்தில், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் பிரையன் லாரா இடையேயும், இந்திய அணியில் சச்சினுக்கும் தற்போதைய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே இதே விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதுபோன்ற விவாதங்களில் ரசிகர் ஒருவர் கொல்லப்பட்டதை இதுவரை யாரும் கேள்வி பட்டது இல்லை. 


தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என காலத்திற்கேற்ப அவரவர் ரசிகர்கள் அடித்து கொள்கின்றனர். இந்த சண்டையில் பல ரசிகர்களும் உயிரிழந்துள்ளது நம் அனைவரும் அறிந்ததே. 


இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்காக வாதமிடுவது இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில்,  அரியலூரில் ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியெல்லாம் ஒரு அணியா? என்று சொன்ன ரோகித் சர்மா ரசிகரை விராட் கோலி ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக தகவல் வெளியானது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


கடந்த அக்டோபர் 11 ம் தேதி இரவு கோலியின் ரசிகரான தர்மராஜூம், ரோகித் ரசிகரான விக்னேஷும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவரும் அவர்களுக்கு பிடித்த வீரர்களைப் பற்றி, பெருமையாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ரோகித் சர்மா ரசிகரான விக்னேஷ், தர்மராஜை பாடி ஷேமிங் செய்ததாக தெரிகிறது. இதனால்  ஆத்திரத்தில் தர்மராஜ் விக்னேஷை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.


சிட்கோ தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் காலையில் விக்னேஷின் உடலைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விக்னேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 














இதையடுத்து, தப்பியோடிய கோலியின் ரசிகரான தர்மராஜை கைது செய்ய வேண்டும் என்றும், ரோகித் சர்மா ரசிகர்கள் இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் வகையிலும் ட்விட்டர்வாசிகள் ட்விட்டரில் #Arrestkohli என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தர்மராஜ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.


இதைத்தொடர்ந்து கொலைக்கான உண்மையான காரணத்தினை கண்டறிய காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் தர்மராஜ் சரளமாக பேசுவதில் சிக்கல் (திக்குவாய்) உடையவர் என்றும், அதனை விக்னேஷ் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததால் ஆத்திரமடைந்த தர்மராஜ் விக்னேஷை கிரிகெட் பேட்டால் அடித்து கொலை செய்துள்ளார் எனவும் அரியலூர் எஸ்.பி பேரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.