பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள நிலையில் அவரைக் காண ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
அர்ஜென்டினா சூப்பர் ஸ்டாரான லியோனல் மெஸ்ஸி அமெரிக்க நாட்டின் மியாமியில் இருந்து துபாய் வழியாக இந்தியாவுக்கு வருகை தந்தார். கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரைக் காண தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்லும் வழியெங்கும் ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் இரவு முழுவதும் காத்திருந்தனர்.
டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் GOAT டூர் எனப்படும் மூன்று நாள் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் விளம்பரதாரரான சதத்ரு தத்தா பார்சிலோனாவில் மெஸ்ஸியின் நீண்ட கால பார்ட்னரான புகழ்பெற்ற ஸ்ட்ரைக்கர் லூயிஸ் சுவாரெஸையும், FIFA உலகக் கோப்பை வென்ற ரோட்ரிகோ டி பாலையும் இணைத்துள்ளார் . இதன்மூலம் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில் மெஸ்ஸி உடன் இணைந்து புகைப்படம் எடுக்க ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.10 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடந்த உலகக்கோப்பையில் அவர் தலைமையிலான அணி தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
மெஸ்ஸி வரும் வழியெங்கும் அர்ஜென்டினா நாட்டின் கொடியை அசைத்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முக்கியமான நபர்களை அவர் சந்திக்கிறார். தொடர்ந்து கொல்கத்தாவின் யுவ பாரதி மைதானத்துக்குச் செல்லும் அவரை முதலமைச்சர் மமதா பானர்ஜி, நடிகர் ஷாரூக்கான், முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோர் வரவேற்க உள்ளனர்.
அதேசமயம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியாவுக்கு வருவது மகிழ்ச்சியின் ஒரு பெரிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என சதத்ரு தத்தா கூறியுள்ளார். மேலும், இந்தியாவுடனான கால்பந்தின் தொடர்பு மீண்டும் வளர்ந்து வருகிறது. இதற்கு முன்பு ஒருபோதும் இந்திய கால்பந்துக்கு இவ்வளவு ஸ்பான்சர்கள் வந்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் லியோனல் மெஸ்ஸியை காண்பது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பை நாங்கள் தவறவிடக்கூடாது. அதற்காக எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் காத்திருப்போம் என ரசிகர்கள் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
யுவ பாரதி மைதானத்தில் நடைபெறும் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி பங்கேற்கிறார். இந்த போட்டிக்கான டிக்கெட் ரூ.4500ல் இருந்து தொடங்கி அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானது. முன்னதாக நடக்கும் நிகழ்ச்சியில் அவர் காணொளி வாயிலாக தனது சிறையை திறந்து வைக்கிறார்.
இதன்பின்னர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்று அங்கும் போட்டியில் விளையாடுகிறார். இதே போட்டியில் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் பங்கேற்கிறார். நாளை மும்பை செல்லும் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடக்கும் நிகழ்ச்சி, வான்கடே மைதானத்தில் நடைபெறும் பேஷன் ஷோவில் கலந்துக் கொள்ளவிருக்கிறார். டிசம்பர் 15ம் தேதி அவர் பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.