பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், மகாபாரதம் குறித்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் என்றால் இனம்,மொழி, கலாச்சாரம் ஆகியவை தாண்டி பகை நாடு என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அதற்கேற்ப விருப்பத்தகாத சம்பவங்களும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. மக்கள் தொடங்கி கிரிக்கெட் விளையாட்டு வரை மக்கள் எதிரிகளாகவே பாவிக்கப்படுகின்றனர். எனினும் ஆங்காங்கே மத நல்லிணக்கத்துக்கான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றது. இஸ்லாமிய மக்களுக்கான முழுமையான சுதந்திர நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. பாகிஸ்தானின் தேசிய மொழி உருது உள்ளது. அதேசமயம் அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தவிர பஞ்சாபி, சிந்தி, பஷ்டோ ஆகிய மொழிகள் பேசும் மக்களும் அங்கு உள்ளனர்.
மகாபாரதம் பற்றிய வகுப்பு
இந்த நிலையில் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நடவடிக்கையாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மகாபாரதம் மற்றும் பகவத் கீதையின் பகுதிகள் உட்பட சமஸ்கிருத வசனங்கள் உருது மொழியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாபாரத தொலைக்காட்சி தொடரின் பாடலின் முதல் வரியான ”ஹை கதா சங்க்ரம் கி” என்பது மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த வார்த்தைகள் உலகின் நன்மைக்காகவும், தர்மம் மற்றும் அதர்மத்தின் நித்திய போராட்டத்தையும் குறிப்பதாகும்.
பாகிஸ்தானில் சமஸ்கிருதத்தின் மறுமலர்ச்சிக்குப் பின்னால் மொழி குறித்து நடைபெற்ற ஒரு மூன்று மாதப் பயிற்சி பட்டறைக்கு மாணவர்கள் மற்றும் அறிஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது ஒரு முறையான பல்கலைக்கழக பாடமாக பரிணாமம் எடுத்துள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் இதை ஒரு முழு ஆண்டு பாடமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் நமக்கும் சொந்தமானது
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய ஃபார்மன் கிறிஸ்தவக் கல்லூரியின் ஆசிரியர் ஷாஹித் ரஷீத், “தெற்காசியப் பிராந்தியத்தின் தத்துவம், இலக்கியம் மற்றும் ஆன்மீக மரபுகளை வடிவமைத்த ஒரு மொழியைப் பற்றிய தீவிர ஆய்வை மீட்டெடுப்பதற்கான முயற்சியின் சிறிய படியாக இந்த விஷயம் பார்க்கப்பட்டாலும், இது முக்கியமான ஒன்றாக கருதுகிறோம். சமஸ்கிருத மொழியை நாம் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது?, அது இந்தப் பகுதி முழுவதையும் இணைக்கும் ஒரு மொழியாக உள்ளது. சிந்து சமவெளி காலத்தில் இங்கு நிறைய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. நாம் அதை ஏற்க வேண்டும். அந்த மொழி எந்த ஒரு மதத்துடனும் பிணைக்கப்படவில்லை. எனவே அது நமக்கும் சொந்தமானது” என குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மாணவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் இப்போது அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டனர். சிலருக்கு சமஸ்கிருதம் வேறு, இந்தி வேறு என்பது அதனைப் பற்றிய புரிதல் இல்லாத வரை தெரியாது. மாணவர்கள் அதன் தர்க்கரீதியான அமைப்பைப் புரிந்துகொண்டபோது, அவர்கள் மொழியை ரசிக்கத் தொடங்கினர் எனவும் அந்த பேராசியர் கூறியுள்ளார். இதனிடையே சமஸ்கிருத ஆவணங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அது பல தசாப்தங்களாக கல்வியாளர்களால் தொடப்படாமல் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்போது உள்ளூர் அறிஞர்களுக்கு சமஸ்கிருதத்தில் பயிற்சி அளிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 10-15 ஆண்டுகளில், பாகிஸ்தானில் இருந்து கீதை மற்றும் மகாபாரத அறிஞர்கள் வெளிவருவதை நாம் காணலாம்