ஒரு பாட்டில் பணக்காரர் ஆகும் அதிசயம் எல்லாம் சூர்ய வம்சம் படத்தில்தான் சாத்தியம் என நினைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் பட்டாளத்துக்கு ’நினைத்தால் முடியாதது எதுவுமில்லை’ எனத் தனது வெற்றிக்கதையின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கேரள இளைஞர் முஸ்தபா.  இட்லி தோசை மாவு விற்றே இன்று 100 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார் இவர். இவர் உருவாக்கியிருக்கும் நிறுவனம் ஐ.டி. ஃபிரெஷ் புட். 




உங்கள் கனவுகள் பெரிதாகவும் நம்பிக்கை உயரமானதாகவும் இருக்கவேண்டுமென்றால் காரணங்களைத் தேடாமல் வாய்ப்புகளைத் தேடுங்கள், நீங்கள் வரலாறு படைப்பதைப் பிறகு யாராலும் தடுக்க முடியாது.  வெற்றிக்கு மூலதனம் நம்பிக்கையும் விடாமுயற்சியும் மட்டுமே பணமோ பட்டமோ கூட இல்லை. இதற்கு முஸ்தபா ஒரு வாழும் உதாரணம் எனலாம்.


ஒருகாலக்கட்டத்தில் முஸ்தபாவிடம் அடுத்தவேளை உணவுக்கே கையில் பணமில்லை. ஆனால் அதே நபர்தான் இன்று ஐ.டி.பிரெஷ் உணவு நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார். இவரது நிறுவனத்தில் கிராமப்புறங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சென்னலோடேவைச் சேர்ந்தவர் முஸ்தபா. அம்மா பள்ளிக்குச் சென்றதில்லை. அப்பா காபி தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர். அப்பாவுக்கு இருந்த கடன் காரணமாக, பள்ளி முடித்து வந்ததும் தினசரி அவருக்கு வேலையில் உதவி செய்யச் செல்வார் முஸ்தபா. அதில் கிடைக்கும் கூடுதல் பணத்தைக் கொண்டுதான் குடும்பம் நடத்தப்பட்டது. எந்த பெற்றோரும் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதைத் தடுக்க மாட்டார்கள். ஆனால் வாழ்வா சாவா போராட்டத்தில் பிள்ளையையும் சேர்த்துக் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றார் அவரது தந்தை.  ஆறாம் வகுப்பில் ஃபெயிலானார் ஆனால் பத்தாம் வகுப்பில் முஸ்தபாதான் க்ளாஸ் டாப்பர். விடாமுயற்சியுடன் படித்தது என்.ஐ.டி. யில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்திலும் வேலை கிடைத்தது. அதில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்தார். நாடு திரும்பியவர் 2005ல் ஐ.டி. இட்லி மாவு கம்பெனியை 550 சதுர அடி நிலத்தில் தொடங்கினார். அந்த நிறுவனம் நாளொன்றுக்கு 100 பாக்கெட்டுகளை விற்றது தற்போது நாளொன்றுக்கு ஆயிரம் பாக்கெட்டுகளை விற்கிறார்கள், இது தவிர மெட்ரோ நகரங்களுக்கும் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். 


இன்றைய தேதியில் இந்தியாவின் ப்ரேக்ஃபாஸ்ட்களின் மகாராஜா இந்த ஐ.டி. நிறுவனம்தான்.இவர்களது 2015-2016ம் ஆண்டின் வருடாந்திர ஈட்டுதல் மட்டும் சுமார் நூறு கோடி. 2017-2018 அது 182 கோடியாக அதிகரித்தது. இவர்களது 2021 நிதியாண்டின் வருமானம் ரூ.294 கோடி. இது மட்டுமல்ல இளைஞர்கள் பலருக்கும் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாகியிருக்கிறார் முஸ்தபா. 

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா முஸ்தபா!