அமெரிக்காவில் மிகவும் முக்கியமான கால்பந்து தொடர் என்றால் அது கோபா அமெரிக்க கால்பந்து தொடர்தான். இந்தாண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகள் மோதின. அமெரிக்க கண்டத்தின் இரு பெரும் கால்பந்து அணிகள் மோதியதால் இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அத்துடன் மெஸ்ஸி மற்றும் நெய்மார் என இரண்டு நட்சத்திர வீரர்களும் ஒரே போட்டியில் களமிறங்கியதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். 


இந்தப் போட்டியின் முதல் பாதியில் 22ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் எஞ்சல் டி மரியா,  ரோட்ரிகோ கடத்தி தந்த பந்தை கோலாக மாற்றினார். இதன் காரணமாக அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் முதல் பாதியில் இரு அணிகள் வீரர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனிளக்கவில்லை. 




அதேபோல் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் தீவிரமாக முயற்சி செய்தனர். குறிப்பாக ஆட்டத்தின் கடைசி இரண்டு நிமிடங்கள் எஞ்சி இருந்த போது மெஸ்ஸிக்கு அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் அதை கோலாக மாற்ற மெஸ்ஸி தவறினார். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதன்மூலம் பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் 2500 நாட்களுக்கு பிறகு தோற்கடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. கடைசியாக பிரேசில் அணி 2500 நாட்களுக்கு முன்பாக தன்னுடைய சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. 






மேலும் அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கோபா அமெரிக்க தொடரை வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்பாக 1993ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்க தொடரில் மெக்சிகோ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இக்கோப்பையை வென்று உள்ளது. இந்த வெற்றியின் மூலம் நீண்ட நாட்களாக சர்வதேச கோப்பையை வெல்லாமல் இருந்த மெஸ்ஸியின் கனவும் தற்போது நிறைவேறியுள்ளது. அர்ஜென்டினா அணிக்காக அவர் வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்த மெஸ்ஸி மற்றும் நெய்மார் தொடரின் நாயகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மரும் இதுவரை எந்த ஒரு சர்வதேச கோப்பையையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இந்திய வம்சாவளியை சேர்ந்த சமீர் பானர்ஜி ஜூனியர் இறுதிப் போட்டிக்கு தகுதி !