கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் ஜூனியர் பிரிவில் இந்திய அமெரிக்க வீரரான சமீர் பானர்ஜி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இவர் பிரான்சு நாட்டின் வீரர் வெயின்பெர்கை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சமீர் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது செட்டை வெயின்பெர்க் 6-4 என்ற கணக்கில் வென்றார். 


மூன்றாவது செட்டில் சுதாரித்துக்கொண்டு ஆடிய சமீர் பானர்ஜி 6-2 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் 7-6,4-6,6-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 17 வயதான சமீரின் தந்தை அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மற்றும் அவருடைய தாய் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாய் தந்தை தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் குடி பெயர்ந்து வசித்து வருகின்றனர். இதனால் சமீர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். 






இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர் மற்றொரு அமெரிக்க வீரர் விக்டரை எதிர்த்து விளையாட உள்ளார். இதற்கு முன்பாக 1990ஆம் ஆண்டு 17 வயது மேற்கு வங்க சிறுவனாக லியாண்டர் பயஸ் விம்பிள்டன் ஜூனியர் பட்டத்தை வென்றார். அவருக்கு பிறகு தற்போது மீண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் ஒருவர் விம்பிள்டன் ஜூனியர் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சமீர் பானர்ஜி உலக ஜூனியர் தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ளார். இவர் இந்தாண்டு நடைபெற்ற பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஜூனியர் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதே தொடரில் ஜூனியர் இரட்டையர் பிரிவில் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தார். இந்தச் சூழலில் தன்னுடைய முதல் விம்பிள்டன் தொடரிலியே இறுதிப் போட்டி வரை தகுதிபெற்று அசத்தியுள்ளார்.






நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அஷ்லி பார்டி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் 6-3,6-7,6-3 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதற்கு முன்பாக அவர் 2011ஆம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தார். 


மேலும் படிக்க: ''சோஷியல் மீடியா கூட யூஸ் பண்ணல.. தங்கம் தான் இலக்கு'' - துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேக்கர்