வில்வித்தை உலக கோப்பை போட்டிகளின் ஸ்டேஜ் 1 கவுதமாலாவில் நடைபெற்றது. இதில் ரிகர்வ் பிரிவில் இந்திய மகளிர் அணி பங்கேற்றது. இந்தியா சார்பில் தீபிகா குமாரி, அன்கிதா பகத், கோமாலி பாரி ஆகியோர் குழுவாக பங்கேற்றனர். உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்று முதல் சிறப்பாக வில்வித்தை செய்து வந்த இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தரவரிசையில் 2ஆவது அணியான மெக்சிகோ அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 2-4 என்று முன்று சுற்றுகளின் முடிவில் இந்திய அணி பின்னிலையில் இருந்தது. அப்போது தீபிகா குமாரி, கோமாலி பாரி துல்லியமாக வில்வித்தை செய்து தொடர்ச்சியாக 10 புள்ளிகளை எடுத்து சுற்றை வென்று 4-4 என சமன் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க ஸூட் ஆஃப் முறை நடத்தப்பட்டது. இதிலும் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி 27 புள்ளிகள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து வில்வித்தை செய்த மெக்சிகோ அணி 26 புள்ளிகள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 5-4 என்ற கணக்கில் தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிர் ரிகர்வ் பிரிவில் இந்திய அணி பெறும் 5 தங்கப் பதக்கமாகும். இதற்கு முன்பாக 2011, 2013,2014 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது.
மேலும் உலகக் கோப்பை ரிகர்வ் பிரிவில் தீபிகா குமாரிக்கு இது 5-வது தங்கப் பதக்கம் ஆகும். இந்திய தங்கப் பதக்கம் வென்ற அனைத்து முறையும் இவர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய மகளிர் அணி இதுவரை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. எனினும் இந்த வெற்றி அவர்களை ஒலிம்பிக் தகுதிக்கு ஒருபடி முன்னேற்றியுள்ளது.
கலப்பு பிரிவில் அடானு தாஸ் மற்றும் அன்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் முதல்நிலை அணியான அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக வில்வித்தை செய்த அடானு தாஸ் மற்றும் அன்கிதா 6-2 என்ற கணக்கில் எளிதில் அமெரிக்க இணையை வீழ்த்தினர். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர்.
உலகக் கோப்பை தொடரின் ரிகர்வ் ஒற்றையர் மகளிர் பிரிவில் தீபிகா குமாரி இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ப்ரைவூனை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் இருவரும் 4-4 என்ற சமமாக இருந்ததால். வெற்றியாளரை தீர்மானிக்க ஸூட் ஆஃப் முறை பயன்படுத்தப்பட்டது. அதில் தீபிகா குமாரி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
அதேபோல் ஆடவர் ரிகர்வ் ஒற்றையர் பிரிவில் அடானு தாஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் டெனியல் கேஸ்ட்ரோவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அடானு தாஸ் 6-4 என்ற கணக்கில் போட்டியை வென்று தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்த உலகக்கோப்பை தொடரின் ஸ்டேஜ் 1 இந்தியா 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.