இன்று காலை தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றியும் ஆலோசனை நடந்துவருகிறது. மேலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதுகுறித்து பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார். இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்த சூழலில், இன்று நடைபெறும் கூட்டத்தில் ஸ்டெர்லைட் திறப்பு விவகாரம் குறித்து முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என திமுக உட்பட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே மின்சாரம் வழங்கப்படவேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்திருக்கிறார்.ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்தால் தென் தமிழக மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் எனவும் பெரும்பாலான கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.