தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சாளராகவும் வலம் வருபவர் அன்ரிச் நோர்க்யா. 2010-ஆம் ஆண்டு தோனியுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வு குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். தோனிக்கு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், கால்களை நகர்த்தி ஆட வேண்டும் என தெரியாது என்று தான் நினைத்ததாக அன்ரிச் நோர்க்யா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 22 விக்கெட்களை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல் அணி இறுதி போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் அன்ரிச் நோர்க்யா என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி என்ன நடந்தது தோனி - அன்ரிச் நோர்க்யா இடையே
2010-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அப்போது சாம்பியன் லீகு தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெட் பந்துவீச்சாளராக அன்ரிச் நோர்க்யா பந்துவீசியுள்ளார். அப்போது சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் பயிற்சி மேற்கொள்ள வந்தபோது அவருக்கு பந்து வீசிய அன்ரிச் நோர்க்யா, தோனிக்கு சரியாக பேட்டிங் செய்ய தெரியவில்லை என தான் நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் நெட்ஸ் பந்துவீசிக் கொண்டிருந்தபோது அன்ரிச் நோர்க்யாவிற்கு 16 வயது, இது குறித்து நினைவு கூர்ந்துள்ள அவர் "நான் பார்ப்பதற்கு பெரிதாக இல்லை, அதனால் நான் யாரையும் அச்சுறுத்தவில்லை. சிறுவர்களுக்கான கிரிக்கெட் அளவில் விளையாடி வந்ததால் அதிகப்படியான வேகமும் என் பந்துவீச்சில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "அப்போது தோனிக்கு நெட்ஸ் பந்துவீசியது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு பேட்டிங் செய்ய தெரியாதது போன்றே அவர் ஆடினார். நான் வீசியதில் இரண்டு பந்துகளை மட்டுமே அடித்த தோனி, நின்றுகொண்டே ஆடினார். கால்களை வழக்கமாக நகர்த்தி ஆடுவது போல் ஆடவில்லை. ஆனால் அனைவரையும் தோனி எதிர்கொண்டார்" என அன்ரிச் நோர்க்யா தெரிவித்துள்ளார்.
மேலும் அறிய : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நடுவர்கள் அறிவிப்பு!
"நான் பொய் சொல்ல விரும்பவில்லை, தோனிக்கு பேட்டிங் ஆட தெரியாது என்றே நினைத்தேன்" என அன்ரிச் நோர்க்யா தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த முறை சாம்பியன் லீக் தொடரை வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த டி20 தொடரில் தோனி 91 ரன்களை விளாசினார், அவரின் சராசரி 45.5-ஆக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் கருத்தை நிச்சயம் பின்னாளில் அன்ரிச் நோர்க்யா மாற்றிக்கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.