பனை மரத்தை பொதுவாக கற்பக விருட்சம் மரத்துடன் ஒத்து கூறுவார்கள்.  கேட்டதை தரும் கற்பக விருட்சம் மரம் போல், பனைமரங்களும் பனை ஓலை, நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி, பனையிலிருந்து செய்யப்படும் பொருட்கள் என மனிதனால் பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய பயன்களை தருவது பனை மரம்தான். 
அத்தகைய பனை மரம் கடந்த 50 ஆண்டுகளில் முற்றிலும் அழியும் அளவிற்கு சேதங்களை சந்தித்து வருகிறது. கணக்கில்லாமல் பனை மரங்கள் அழிந்து தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.





கடைசியாக எடுக்கப்பட்ட  கணக்கின் படி, இந்தியாவில் உள்ள பனைமரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி. என்றும் அதில் 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில்தான் இருப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில், அதிகமான பனைமரங்கள் வெட்டப்பட்டதால் அது பாதியாக குறைந்து 2.50 கோடியாகிவிட்டது என பனை ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பனைமரங்கள் அழிவுக்கு  தொடர்ந்து வெட்டப்படுவதாலும், அவற்றை ஈடு செய்யும் விதத்தில் புதிய பனை மரங்கள் வளர்க்கப்படாததும் காரணமாக செல்லப்படுகிறது.




தமிழகத்தின் மாநில மரமாகப் பனை அறியப்படுகிறது. ஆனாலும் அதற்கான முக்கியதுவம் என்பது தமிழகத்தில் குறைந்தது மரங்களும் படிப்படியாக அழிய தொடங்கி அழிந்து வருகிறது. பல சிறப்புகளை உடைய பனைமரங்களை நாம் காக்க விட்டால் அதற்கு இயற்கை தரும் பேரிடர்களை நாம் பரிசாக ஏற்கும் சூழல் உருவாகும் என சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் குமரேசன் என்பருக்கு சொந்தமான நிலம் உள்ளது.மேட்டூர் அணையில் வரும் 12 ம் தேதி தண்ணீர் திறக்கபடவுள்ள நிலையில் சம்பா சாகுபடி பணிக்காக நிலத்தை சீரமைக்கும் பணியை குமரேசன் துவங்கினார். பணியாளர்கள் சிலர் நிலத்தில் வளர்ந்து காய்ந்து கிடந்த செடி, கொடிகளை அகற்றி தீ வைத்தனர். அப்போது காற்றின் வேகத்தில் தீ பொறிகள் பறந்து அருகில் இருந்த பனைமரத்தில் பட்டு தீ பிடித்தது.




இதனையடுத்து தீயை அணைக்க விவசாயிகள் முயற்சித்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த மரங்களுக்கும் தீ பரவியது. இதனால் அங்கு இருந்த ஏராளமான பனைமரங்கள் எரிந்து கருகியது. வயல் பகுதி என்பதால் தீயணைப்பு வாகனமும் செல்ல முடியாததால் மரங்கள் முற்றிலும் கருகியது. எங்கெல்லாம் பனை மரங்கள் வளர்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும். அங்கு விவசாயம் செழிக்கும், எங்கு பனைமரங்கள் காய்ந்து தலை சாய்க்கிறதோ அங்கு வறட்சி ஏற்பட்டு அங்கு பஞ்சம் ஏற்படும் என கூறுவார். மரம் தீயில் கருகி எரிந்ததால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர்.