உலகின் பிரபல விளையாட்டுகளில் ஒன்று டென்னிஸ். டென்னிஸ் உலகின் பிரபலமான வீரர்களில் ஒருவர் ஆன்டி முர்ரே. 37 வயதான இவர் இங்கிலாந்து நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர். இவருக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், இவர் இன்று ஒலிம்பிக் தொடருக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆன்டி முர்ரே ஓய்வு:
37 வயதான ஆன்டி முர்ரே வரும் பாரீஸ் ஒலிம்பிக்கே தனது கடைசி டென்னிஸ் தொடர் என்று அறிவித்துள்ளார். மேலும், பிரிட்டனுக்கு போட்டியிடுவது எனது தொழில் வாழ்க்கையின் மறக்க முடியாதது ஆகும். இறுதியாக அதைச் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஆன்டி முர்ரேவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆன்டி முர்ரே சமீபகாலமாக அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொண்டார். இது அவரது விளையாட்டுத் திறனை கடுமையாக பாதித்தது. அதேசமயம், அவரது கணுக்காலில் ஏற்பட்ட காயம் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
சர் ஆண்ட்ரூ பேரன் முர்ரே என்ற முழுப்பெயர் கொண்ட ஆன்டி முர்ரே புகழ்பெற்ற விம்பிள்டன் பட்டத்தை 2 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை ஒரு முறையும் கைப்பற்றியுள்ளார். ஒரு காலத்தில் தொடர்ந்து டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்திய ஆன்டி முர்ரே 2016ம் ஆண்டு தொடர்ந்து 41 வாரங்கள் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
ஒலிம்பிக் நாயகன்:
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 2010, 2011, 2013, 2015 மற்றும் 2016ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ப்ரெஞ்ச் ஓபன் தொடரில் 2016ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் 2012 மற்றும் 2016ம் ஆண்டு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 2012ம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆன்டி முர்ரே ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் பிறந்தவர். இவரது தாத்தா ராய் எர்ஸ்கின் 1950களில் பிரபல கால்பந்து வீரர் ஆவார். சிறுவயது முதலே டென்னிஸ் மீது ஆர்வம் கொண்ட முர்ரே இரண்டு கைகளிலும் சிறப்பாக டென்னிஸ் ராக்கெட்டை பயன்படுத்துவதில் கில்லாடி ஆவார். 2005ம் ஆண்டு முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2010 காலகட்டத்தில் டென்னிஸ் உலகை பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோருடன் இணைந்து கலக்கிய பெருமை ஆன்டி முர்ரேவுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன் உள்பட உலகின் பல தொடர்களில் பங்கேற்று வெற்றிகளை சூடிய ஆன்டி முர்ரேவின் ஓய்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.