நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் தொடர் சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், மனுதாரர்களில் ஒருவருக்காக வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை ஆஜரானார்.
மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரேந்திர ஹூடா பேசும்போது, மேத்யூஸ் நெடும்பாறை இடைமறித்து பேசினார். அப்போது, ஹூடாவுக்கு பிறகு பேசுமாறு தலைமை நீதிபதி கேட்டு கொண்டார். ஆனால், தான்தான் இங்கு மூத்த வழக்கறிஞர் என மேத்யூஸ் நெடும்பாறை பதில் அளித்தார்.
இதனால் கடும் கோபம் அடைந்த தலைமை நீதிபதி சந்திரசூட், "நான் உங்களை எச்சரிக்கிறேன். நீதிபதிகளிடம் அப்படி பேசக்கூடாது. இந்த நீதிமன்றத்திற்கு நான்தான் பொறுப்பு. பாதுகாப்பு அதிகாரிகளை அழைப்பு விடுக்கிறேன். அவரை, இங்கிருந்து அகற்றுங்கள்" என உத்தரவிட்டார்.
கடும் கோபம் அடைந்த தலைமை நீதிபதி: இதற்கு, "நானே இங்கிருந்து செல்கிறேன்" என மேத்யூஸ் நெடும்பாறை பதில் அளித்தார். உடனே, "நீங்கள் அதை சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் செல்லலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை நான் பார்த்து வருகிறேன். இந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது" என சந்திரசூட் எதிர்வினையாற்றினார்.
"நான், 1979ஆம் ஆண்டு முதல் பார்த்து வருகிறேன்" என மேத்யூஸ் நெடும்பாறை கூறினார். இதற்கு, "நியாயமற்ற உத்தரவை வெளியிட வேண்டியிருக்கும்" என தலைமை நீதிபதி மீண்டும் எச்சரித்தார். இறுதியில், நீதிமன்றத்தில் இருந்து மேத்யூஸ் நெடும்பாறை வெளியேறினார்.
நீட் தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையை நடந்த காரசார விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.