நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா 4 கேட்ச் பிடித்து ஃபில்டிங்கில் அசத்தினார். அவரின் ஃபீல்டிங்கை பலரும் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஜடேஜா தொடர்பாக மகேந்திர சிங் தோனி 2013ஆம் ஆண்டு போட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், “சர் ஜடேஜா கேட்ச் பிடிக்க வேண்டும் என்று ஓட மாட்டார். ஆனால் பந்து தான் அவரை தேடி வந்து பிடிக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார். இதனை தற்போது ரசிகர்கள் மீண்டும் பதிவிட்டு அன்றே சொன்ன தல தோனி என இருவரையும் பாராட்டி வருகின்றனர்.
அத்துடன் நேற்றைய போட்டியில் கேட்ச் பிடித்த பிறகு ஜடேஜா யாருக்கோ போன் செய்வது போல ஒரு செய்கையை செய்தார். அவரின் அந்த செய்கையும் ட்விட்டர் பக்கத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனை பலரும் தங்களது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். ராயுடு, சாம் மற்றும் பிராவோ ஆகியோரின் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.
188 ரன்கள எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன், ராஜஸ்தான் அணியில் பட்லர் மட்டும் சற்று நிதானமாக ஆடி 49 ரன்கள் எடுத்தார், மற்றவர்கள் வந்ததும் பெவிலியன் திரும்பினர். இறுதியில், ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயீன் அலி 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பிராவோ தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த சீசனில் சென்னை 2வது வெற்றியை தன் வசமாக்கியது.
இதன்மூலம் தோனி சென்னை அணியின் கேப்டனாக 200ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சென்னை அணியின் கேப்டனாக தோனி முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.