தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் (20 ஏப்ரல் 2021) இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் சில தளர்வுகளுடன் கூடிய முழுநேர ஊரடங்கும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவில் இரவு நேரங்களில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. மேலும் பகல் நேரங்களில் இயக்கப்படுகின்ற பேருந்து சேவைகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்பநிலை பரிசோதனை, கூட்ட நெரிசலை தவிர்த்திட விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்தால் உள்ளிட்டவை கடைபிடிக்க வேண்டும்.




அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினை கருத்தில்கொண்டு பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும். பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும், இயக்கப்படுகின்ற பேருந்துகளானது காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமைகளில் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயண தேதியை மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக தங்களுக்கு அருகே உள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்துகொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் முன்பதிவு செய்தோர்க்கு செலுத்தப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இணைய வழியாக பதிவு செய்தவர்களும் இணைய வழியாகவே பணத்தை திரும்பபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  




மாநகர போக்குவரத்துக்கு கழகத்தை பொறுத்தவரை நின்றுகொண்டு செல்ல பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் அனைத்து வழித்தாண்டங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றின் எண்ணிக்கை 11,000 ஆயிரத்தை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட நகரங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனாவின் தாக்கம் இந்த இரண்டாவது அலையில் மிகவும் கடுமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.    


மஹாராஷ்ட்ரா மாநிலத்தை தொடர்ந்து தற்போது டெல்லியிலும் ஒரு வாரம் முழு அடைப்பினை டெல்லி அரவிந்த் கேஜிரிவால் அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. தமிழகத்திலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு தேவைப்படும் என்று மருத்துவ குழு அரசிடம் வலியுறுத்திய நிலையில், முழு ஊரடங்கு மறுபடியும் பிறப்பிக்கப்பட்டால் மக்கள் கொதித்துவிடுவார்கள், ஆகையால் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கலாமே தவிர முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.