சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே, ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ருதுராஜ் 10 ரன்னில் வெளியேற டு பிளிஸ்சிஸ் 33 ரன்னிலும், மொயீன் அலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 18 ரன்னிலும் அம்பத்தி ராயுடு 27 ரன்னிலும் ஆட்டமிழக்க, பட்டையை கிளப்புவார் தோனி என எதிர்பார்த்தால் அவரும் 18 ரன்னில் நடையை கட்டினார். ராயுடு, சாம் மற்றும் பிராவோ ஆகியோரின் ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 188 ரன்கள எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன், ராஜஸ்தான் அணியின் பட்லர் மற்றும் வோரா களம் இறங்கினர். பட்லர் மட்டும் சற்று நிதானமாக ஆடி 49 ரன்கள் எடுத்தார், மற்றவர்கள் வந்ததும் பெவிலியன் திரும்பினர்.
ஒரு கட்டத்தில் டெவாட்டியாவும், உனத்கட்டும் சேர்ந்து 42 ரன்கள் சேர்க்க ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால் டெவாட்டியா 20 ரன்னில் வெளியேற அடுத்து உனத்கட்டும் 24 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயீன் அலி 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த சீசனில் சென்னை 2வது வெற்றியை தன்வசமாக்கியது.