டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆப்கானிஸ்தானில் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தலிபான்கள் வசம் ஆட்சி சென்ற நிலையில், அங்கு நடந்து வரும் சூழல்கள் உலக அரங்கில் அனுதாபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் புதிய புதிய சட்டங்கள், அந்நாட்டு கட்டமைப்பை அசைத்து பார்த்து வருகிறது. அந்த வகையில் ஆப்கானில் கிரிக்கெட் இருக்குமா... இருக்காதா... என்கிற சூழலில் தான், டி20 உலகக்கோப்பை போட்டி நெருங்கி வந்தது.
உலக அரங்கில் கத்துக்குடி அணி தான் என்றாலும், நல்ல திறமையான வீரர்களை கொண்ட அணி தான் ஆப்கானிஸ்தான் அணி. இப்போது வரை ஆப்கான் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதற்கு காரணம், தலிபான்களுக்கு கிரிக்கெட் மீதுள்ள வெறுப்புணர்வே. ஆங்கிலேயர் கண்டுபிடித்த விளையாட்டு என்கிற வகையில் கிரிக்கெட் மீது அவர்களுக்கு வெறுப்பு. அவர்களின் சட்டதிட்டபடி, பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள். அந்த வகையில் தான்அவர்களின் முடிவுகள் விமர்ச்சிக்கப்படுகிறது.
இவ்வளவு சிக்கலுக்கு இடையே நேற்று சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்து அணியை சந்தித்தது ஆப்கானிஸ்தான். ஒவ்வொரு முறை போட்டியின் போதும் பங்கேற்கும் அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று ஆப்கானிஸ்தானின் தேசிய கீதம் மைதானத்தில் இசைக்கப்பட்டது. அதுவரை மனதளவில் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருந்த ஆப்கான் வீரர்கள், தேசிய கீதம் ஒலித்தததும், உடைந்து போயினர். அதற்கு காரணம், தங்கள் நாட்டின் தேசிய கீதத்தையும், தேசிய கொடியையும் அவர்கள் சமீபத்தில் கேட்டு பல மாதங்கள் ஆகிறது. அதுமட்டுமின்றி, பல்வேறு இடையூறுகளுக்கு இடையே மைதானத்திற்கு வந்து அந்நாட்டு கொடியோடு அணியினரை வரவேற்ற அந்நாட்டு மக்களின் அன்பும், அவர்களை நெகிழச் செய்தது.
அணியின் தலைவர் முகமது நபி, தேசிய கீதம் முடிந்ததும் கண்ணீர் விட்டு அழுதார். மனதில் இருந்த வலி, கண்களின் வழியாக கண்ணீராய் வெளியேறியதை அப்போது காண முடிந்தது. சக வீரர்களும் கலங்கித் தான் போயினர். எந்த அளவிற்கு மனதில் வலி இருந்ததோ, அதே வலியோடு போட்டியை எதிர்கொண்டு முதலில் பேட் செய்து ஸ்காட்லாந்து பந்து வீச்சை சின்னாபின்னமாக்கினர். 20 ஓவரில் 190 ரன்கள் குவித்த ஆப்கான் அணி, அடுத்த களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியை 60 ரன்களில் சுருட்டி, 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானின் வெற்றியை விட அணியினரின் கண்ணீர் தான் தற்போது அனைவராலும் பேசப்படுகிறது. அந்த வலி அவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. இதோ அந்த வீடியோ...