2023 ஆண்களுக்கான ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், லீக் போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்ற.


இந்தியா vs பாகிஸ்தான்


சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் தொடரில் இன்றோடு லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. எல்லா அணிகளும் இன்று அவர்களது கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் ஆடும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


இந்த போட்டியை முதன் முறையாக இந்தியாவில் நடத்துவதால் இந்திய அணி கோப்பையை வெல்ல எல்லோரையும் விட ஒரு படி முன்னே உள்ளது. புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இந்த போட்டியையும் வென்று அந்த இடத்திலேயே இருந்து லீக் போட்டிகளை முடிக்க ஆர்வமாக இருக்கும்.



ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்தியா


மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த சந்திப்பு அடுத்து வரக்கூடிய ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும். எல்லா அணிகளும் 4 போட்டிகள் ஆடிய பிறகு எந்த போட்டியிலும் தோல்வியடையாத ஒரே அணியாக இந்தியா உள்ளது. ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 1-1 என்ற டிரா மட்டுமே இந்திய அணிக்கு ஒரு களங்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கணக்கில் வீழ்த்தி அபாரமாக வென்றது. அதன் பின் மிகவும் திறமையான மலேசியா அணியை 5-0 என வீழ்த்தியது. ஜப்பான் போலவே கொரியாவும் இந்தியாவிற்கு கடினமான சவாலை அழித்தளனர். இருப்பினும் இறுதியில் 3-2 என்று வென்று முன்னிலையில் நீடிக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்: Naga Tribes Rally: 3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் வன்முறை.. இன்று பேரணியில் ஈடுபடும் நாகா மக்கள்.. மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு..!


ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபியில் பாகிஸ்தான் 


இந்தியா போல் அல்லாமல், பாகிஸ்தானுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைய இருந்தன. அவர்களின் தொடரே மலேசியாவிடம் அடைந்த தோல்வியுடன் தொடங்கியது. ஆனால் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு எதிரான டிரா செய்து ஆட்டத்தில் நீடித்தனர். பின்னர் சீனாவுக்கு எதிராக வெற்றி பெற்று, தற்போது அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளது.



அரை இறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் நாள்


பாகிஸ்தான் அணி இந்த போட்டியை வென்றால் நான்காம் இடம் உறுதி ஆகும். ஆனால் தோல்வி அடைந்தால் ஜப்பான் அணிக்கு சிறிய வாய்ப்பு கிடைக்கும். சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான போட்டியின் முடிவில் அவர்களின் தலைவிதி இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு முன்பே ஜப்பான் - சீனா போட்டிகள் நடைபெற்று விடுவதால், பாகிஸ்தான் வென்றே ஆக வேண்டுமா என்பது அந்த போட்டிக்கு பின் தெரிந்துவிடும். ஏனென்றால் ஜப்பான் வென்றாலும் கோல் வித்தியாசம் சிறிதாக இருந்தால் பாகிஸ்தானுக்குதான் வாய்ப்பு.


ஆனால் பெரிய வெற்றியை பெற்றால் பாகிஸ்தானின் இடம் கேள்விக்குறியாகும். ஒரு வேளை மலேசியா தென் கொரியாவை ஒரு பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கும் பட்சத்தில், தென் கொரியாவை வெளியே அனுப்பி பாகிஸ்தான் உள்ளே வர வாய்ப்புகள் இருக்கும். எனவே இன்றைய 3 போட்டிகளும் அடுத்த இரண்டு அரை இறுதி போட்டியாளர்களை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும். மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மலேசியா (9 புள்ளிகள்), தென் கொரியா (5), பாகிஸ்தான் (5), ஜப்பான் (2), சீனா (1) ஆகிய இடங்களிலும் உள்ளன.


இந்திய அணி: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூர் பதக், ஹர்மன்ப்ரீத் சிங் (சி), அமித் ரோஹிதாஸ், ஜர்மன்ப்ரீத் சிங், சுமித், ஜக்ராஜ் சிங், வருண் குமார், ஹர்திக் சிங் (விசி), ஷம்ஷர் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, ஆகாஷ்தீப் சிங், எஸ்.கார்த்தி, குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், பவன், மன்தீப் சிங்.


பாகிஸ்தான் அணி: முகமது உமர் பூட்டா (கேப்டன்), ராணா அப்துல் வஹீத் அஷ்ரப் (துணை கேப்டன்), அக்மல் ஹுசைன், அப்துல்லா இஷ்டியாக் கான், முகமது அப்துல்லா, முகமது சுஃப்யான் கான், எஹ்திஷாம் அஸ்லாம், ஒசாமா பஷீர், அகில் அகமது, அர்ஷத் லியாகத், முகமது லியாகத், ஹனான் ஷாஹித், ஜகாரியா ஹயாத், ரோமன், முகமது முர்தாசா யாகூப், முகமது ஷாஜைப் கான், அஃப்ராஸ், அப்துல் ரஹ்மான்.