சேலம் மாநகர் கோட்டை மைதானத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து விழாவில் பேசி ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் வரலாற்றை கூறியாக வேண்டும், அப்படி சொல்லாத காரணத்தினால்தான் யாராரோ கட்சி ஆரம்பிக்கிறார்கள்.
எமர்ஜென்சியில் எடப்பாடி பழனிசாமி:
ஒரு நலத்திட்ட உதவிகளை கொடுத்துவிட்டு, நான்கு சினிமாவில் நடித்துவிட்டு, இரண்டு மன்றத்தை ஆரம்பித்துவிட்டால், ஒரு கட்சி ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் தமிழகத்தில் ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் திமுக வரலாற்றை முழுமையாக இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கவில்லை. கலைஞரின் வரலாறு தான் திமுகவின் 50 ஆண்டுகாலம். திமுக தலைவராக இருந்து வழி நடத்தியவர்.
எமர்ஜென்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்திருந்தால் தற்கொலை செய்து இருந்திருப்பார். எமர்ஜென்சி நேரத்தில் திமுகவின் ராஜாராம் டெல்லி வட்டாரத்தில் நெருக்கமாக இருந்தவர், எமர்ஜென்சி காலத்தில் டெல்லிக்கு திமுக தலைவர் அனுப்பி வைத்தார். இந்திராகாந்திக்கு தெரிந்து தான் செய்கிறார்களா? இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக கருணாநிதி அனுப்பி வைத்தார்.
எமர்ஜென்சியில் நடந்தது என்ன?
கோவை மாநாடு நடக்காமல் இருந்திருந்தால் திமுக ஆட்சி கலைந்திருக்காது, அந்த மாநாட்டில் ஒருவர் வேகமாக ஆவேசமாக பேசிவிட்டார். பேர் சொல்ல விரும்பவில்லை, அங்கு பேசியே பேச்சைக் கேட்டுவிட்டு தான் ஆத்திரமடைந்து விட்டார் என்று ராஜாராம் கூறியிருந்தார். அந்த நபரும் தெரிந்து பேசவில்லை, வேகத்தில் பேசிவிட்டார். அதைப்பற்றி தற்போது கூறினால் நீதிமன்றம் செல்ல நேரிடும் அதனால் கூறவில்லை. அந்த மாநாட்டில் பேசிய அந்த நபர் தையல்மிஷின் கொடுக்கும் திட்டத்தை கலைஞர் அறிவித்துள்ளார்.
இந்திராகாந்தி வேண்டுமென்றால் மனுபோடலாம் என்று பேசிவிட்டார். கருணாநிதி வந்த மேடையிலேயே கண்டித்துவிட்டார். இந்த ஆடியோ மத்திய அரசுக்கு சென்றடைந்த நிலையில், ஆவேசப்பட்ட இந்திராகாந்தி, முதலமைச்சர் கருணாநிதி எனக்கு தையல்மிஷின் கொடுக்க ஆர்வமாக உள்ளாரா? என்று கூறியுள்ளார். எமர்ஜென்சி பற்றி பேசவேண்டாம், மாநில கட்சிகளை தடை செய்யப்படலாம் என்று கூறியிருந்தார்.
பெயர் மாற்றம்:
எமர்ஜென்சியால் மாநில கட்சி தடை செய்யலாம் என்ற நிலை வந்தவுடன் எம்ஜிஆர் பயந்துகொண்டு தனது கட்சியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெயரை மாற்றிவிட்டார். எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்தவர் நான், எம்ஜிஆர்விற்கு டெபாசிட் கட்டியது, என் கைதான் என்பதை அதிமுகவில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். திமுக கொடி உருவானது கருணாநிதியின் ரத்தத்தில் தான். எமர்ஜென்சி காலத்தில் திமுகவின் பெயரை மாற்றியிருந்தால் திமுக என்ற பெயரும், கொடியும் இருந்திருக்காது.
நேற்று பிறந்தவர்கள் சவால்:
காங்கிரஸ் கட்சி கூட, காளை மாட்டின் துவங்கி கைச்சின்னத்தில் வந்து நின்றுள்ளது. நேற்று பிறந்தவர் எல்லாம் திமுகவிற்கு சவால் விடுகிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் எங்குபார்த்தாலும் டர்பன் கட்டிக் கொண்டவர்கள் மட்டும் தான் இருப்பார்கள். திமுக ஆட்சி காலத்தில் பிற்படுத்தவர்கள் அனைவரையும் இடஒதுக்கீட்டில் கொண்டு சென்று, தற்போது உச்சநீதிமன்றத்தில் டர்பன் ஒன்று கூட இல்லை, டர்பனங்கள் அனைத்தையும் கழட்டியவர் கருணாநிதி. இதை செய்ததால் தான் பாஜகவினர் கடுமையாக தி.மு.க.வை எதிர்க்கின்றனர்.
வெறிபிடித்தவர்:
ஆளுநர் ஆர்.என்.ரவி வெறிபிடித்த பீகார் பிராமின், திராவிடம் என்ற வார்த்தை இருப்பது தவறு என்று நினைப்பவர், தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தமிழகத்தில் சரிசமமாக அமர்ந்துள்ளார் என்றால் அதற்கு திமுக தான் காரணம் என்று எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் திமுக இல்லை என்றால் எங்களுக்கு நஷ்டம் இல்லை, மக்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னால் சென்றுவிடுவார்கள் என்றும் பேசினார்.
மேலும் பட்டையடித்துக்கொண்டால் இந்துக்கள் என்று அர்த்தமா? நாங்கள் தான் இந்துக்கள். இந்தியாவில் இன்னும் ஆறு மாதகாலம் மட்டும்தான் பாஜகவுக்கு ஆட்சி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் மிகப்பெரிய பொறுப்பை வகிக்க உள்ளார். அனைத்து தலைவர்களும் ஒருவரை எதிர்பார்த்திருக்கிறார் என்றால் இந்தியாவின் மூளை தமிழ்நாடு ராஜாஜி என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்தியாவின் மாஸ்டர் மைண்டாக திமுக தலைவர் ஸ்டாலின் என்பது வெகு தூரத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்றிணைத்து உள்ளது.
பக்ரீத் பிரியாணியாகி விடுவார்:
அண்ணாமலையை பற்றி பேசுங்கள் என்று கூட்டத்தில் ஒருவர் எழுந்து பேசியபோது, அண்ணாமலை ஒரு அனாதை அவரைப்பற்றி என்ன பேச வேண்டும் என்று கூறினார். ஆடு ஏதாவது பேசினால், பக்ரீத் பிரியாணியாகி விடுவார் என்று கிண்டல் செய்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் முட்டிக்கொண்டது. அண்ணாமலை தலைவர் பதவியுடன் வருகிறாரா? என்பது தெரியவில்லை, பாஜக மத்திய தலைமை புடுங்கி கொண்டு அனுப்புகிறார்களா? என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் அமைகின்ற ஆட்சி திமுக தலைவர் ஸ்டாலின் யாரை அடையாளம் காட்டுகிறாரோ? அவர் தலைமையில் தான் அமையும். அந்த அமைச்சரவில் திமுகவை சேர்ந்தவர்கள் இடம் பெறுவார்கள் நாடு நலம்பெறும் எனவும் கூறினார்.