தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான 48-ஆவது ஜூனியா் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று இரவு தொடங்கி பகல், இரவு ஆட்டங்களாக ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 21 -ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்களிலும் இருந்து 38 அணிகள் கலந்துகொண்டன.




முன்னதாக போட்டி துவக்க நிகழ்ச்சியாக சீர்காழி நகரின் முக்கிய வீதியின் வழியாக 38 மாவட்ட கபடி வீரர்கள் பேரணியாக போட்டி நடைபெறும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு வந்தடைந்தனர். அதனை அடுத்து போட்டிகளை மயிலாடுதுறை திமுக மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் வீரர்களுக்கு கை குலுக்கி போட்டியினை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள 150 விளையாட்டு வீரர்களில் உத்தரகண்ட்டில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் விளையாட கூடிய 12 வீரர்கள் தமிழ்நாடு அணிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். 




நேற்று இரவு முதலில் துவங்கிய லீக் ஆட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அணியும்,  நீலகிரி மாவட்ட அணியும் விளையாடியது. இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட அணி முப்பது புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நாமக்கல், செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த லீக் போட்டிகளில் விளையாடினர். இப்போட்டியில் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக தலைவரும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவருமான சோலை எம். ராஜா தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொதுச்செயலாளர் சபியுல்லா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.


சீர்காழியில் நடைபெற்ற மற்றொரு போட்டி!


சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமத்தின் 50 ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மகளிருக்கான கோலப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கிவரும் தனியார் (விவேகானந்தா கல்வி குழுமம்) பள்ளியில் 50 ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக இன்று மகளிருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு வண்ண கோலங்களை வரைந்தனர். 




குறிப்பாக இயற்கையை காப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், தண்ணீரை சேமிப்போம் போன்ற கருத்துகளை பிரதிபலிக்கும் கோலங்கள் மற்றும் இயற்கையான பொருட்களை பயன்படுத்திய கோலம் என பல்வேறு வகையான வண்ண கோலங்கள் பார்வையாளர்களை  வெகுவாக கவர்ந்தது. முதல் மூன்று இடங்களை பிடித்த கோலங்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கி பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார். மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்  சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.