’மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என பாடிய காலம் முதல் சென்னை, இது நம்ம சென்னை என உரிமைக் கொண்டாடும் இந்தக்காலம் வரை, நாமும் சென்னையும் மாறிக் கொண்டே வருகின்றன. ஆனால், சென்னைக்கு என்று இருக்கும் சில சிறப்புகளை யாராலும், எந்தக்காலத்தாலும் மாற்றவும் முடியாது, அழிக்கவும் முடியாது. அந்தளவுக்கு அவை வரலாற்றோடு பின்னப் பிணைந்து இருக்கிறது என்றால் மிகையில்லை.


சென்னையின் வரலாற்று சோகம்:


நமது இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில், சென்னைக்கு இருக்கும் ஒரு பிரத்யேகச் சிறப்பு வேறு நகரங்களுக்கு கிடையாது. அது என்னவென்றால், மூன்று ஓடும் நீர்நிலைகளைக் கொண்ட நகரம், சென்னை மாநகர் என்பதுதான் அந்தச்சிறப்பு. எத்தகைய வறட்சி வந்தாலும், பயன்படுத்த முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் சாக்கடையாகவாது ஓடிக் கொண்டிருக்கிறது கூவம் நதி.




மற்றொன்று, சாக்கடை ஆறாக மாறிக்கொண்டிருக்கும் அடையாறு நதி. மூன்றாவது, பக்கிம்ஹாம் கால்வாய். இத்தகைய மூன்று நீர் நிலைகள் இருந்தும், குடிநீர்ப் பஞ்சம் வராமல் சென்னை தப்பித்த ஆண்டுகளை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அந்த அளவுக்கு குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு எந்தவொரு அரசாங்கமும் திட்டமிடலைச் சீராக செய்யாததால், சென்னையும் குடிநீர்ப் பஞ்சமும் பிரிக்க முடியாதவை ஆக மாறிவிட்டன.


பன்னெடுங்காலமாக, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், கூவம் சீரமைப்பு, அடையாறு தூர்வாரல் என பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவது ஆண்டுதோறும் அரங்கேறும். ஆனால், இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கூவத்திலும், அடையாறிலும், பக்கிங்ஹாம் கால்வாயிலும் படகுச்சவாரி என்பது கனவாகவே இருக்கிறது. 


மதராஸின் டார்லிங் பக்கிங்ஹாம் கால்வாய்:


கூவத்தையும் அடையாறையுமே பிரித்து பார்க்கத் தெரியாத பலர்தான் இன்றும் சென்னையில் வசிக்கிறார்கள் என்பது வருத்தம் தருகிறது. அதேபோல், நம்மில் பலருக்கு பக்கிம்ஹாம் கால்வாய் இன்னும் இருக்கிறதா? என்ற கேள்வியும் வரும். இன்றும் இருக்கிறது. ஒரு காலத்தில், ஆங்கிலேயர்களால், நதி நீர் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் பக்கிம்ஹாம் கால்வாயும் ஒன்று. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் நீர்த்தடம்தான், பக்கிங்ஹாம் கால்வாய்.





ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து புதுச்சேரி அருகே உள்ள மரக்காணம் வரை சுமார் 800 கிலோமீட்டர் தொலைவிற்கு பல்வேறு காலக்கட்டங்களில் இந்த கால்வாய் வெட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் வெறும் 32 கிலோமீட்டர் தூரம்தான் பயணிக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் இந்த கால்வாயில் பயணித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அட்டவணைப்போட்டு, படகுகளை இயக்கி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வரலாறு. மாலை நேரங்களில் படகுச் சவாரி செல்வது ஒரு அலாதியான இன்பத்தைத்தரும் என அன்றைய சென்னைவாசிகள் கருதியதால், இது அன்றைய "மெட்ராஸின் டார்லிங்" என்ற ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தற்போது, வெறும் நாற்றத்தை தாங்கிக் கொண்டு, சாக்கடை, குப்பைகளுக்காகவும்தான் இது பயன்படுத்தப்படுகிறது என்பது வரலாற்றுச் சோகம். 


அந்தக்கால “ஷேர் ஆட்டோ”:


அதேபோன்று, இன்றைய  ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கால்டாக்சிகளுக்கு சவால்விடும் வகையில், அன்றைய மெட்ராஸை கைக்குள் வைத்திருந்த மக்கள் போக்குவரத்து என்றால் குதிரை வண்டிகளும், ட்ராம் போக்குவரத்தும்தான். டிராம் போக்குவரத்தை பொறுத்தவரை, 1877-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1953-ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. சென்னையின் மவுண்ட்ரோட், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ரிப்பன் பில்டிங், பாரிமுனை வரை இந்த ட்ராம் போக்குவரத்து இருந்தது வந்தது.




ஆனால், கால ஓட்டத்தின் வேகத்திற்கு, ட்ராம் ஈடுகொடுக்க முடியாமல், தற்போது வரலாற்றுச்சின்னமாக மாறிவிட்டது. ஆனால், இன்றைய ஆட்டோ போல், சென்னை மாநகரின் சந்து பொந்தெல்லாம் இருந்த போக்குவரத்து என்றால் அது குதிரை வண்டிதான். ஆனால், இயந்திரங்களும் மோட்டார் சக்கரங்களும் குதிரை வண்டியை ஓரம் கட்டிவிட்டன. இன்றும் அவ்வப்போது, மெரீனா கடற்கரையில் பார்க்கும் குதிரைகள்தான், சென்னைக்கு குதிரையை ஞாபகப்படுத்துகின்றன. குதிரைவண்டிகளை இன்றும் பார்க்க வேண்டும் என்றால் ரிப்பன் பில்டிங் எதிரே இருக்கும் லாயத்தில் சில சமயம் இருக்கும். ஆனால், தற்போது அதையும் எடுத்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. 


குதுகலமாக்கிய மாடி பஸ் பயணம்:


80ஸ் கிட்ஸ் என்ற ஸ்டைலாக சொல்லப்படும் 1980-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், சென்னையில் அன்றைய காலகட்டத்தில் டபுள் டெக்கர் எனும் மாடி பஸ் ஊரையே வலம் வந்தது.




பொதுவாக, பச்சைக்கலரில் வலம் வந்த அந்தப் பேருந்துகளை 80-களின் குழந்தைகள் மட்டுமல்ல, அந்தக் காலத்தில் இருந்த அனைத்து வயதினரும் குழந்தைகளைப் போல் குதுகலமாக அந்தப் பேருந்துகளில் பயணித்தனர் என்பதையும் மறக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. ஆனால், செலவு அதிகம், போக்குவரத்து சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால், 90களின் மத்தியில் மாடி பஸ் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் வரப்போகிறது என்று பேசப்படுகிறது. வந்தால், இந்தக்கால குழந்தைகளும் அந்த அனுபவத்தை சென்னையில் ரசிக்கலாம்.


சென்னையின் வரலாற்று ஆச்சர்யம்:


வந்தாரை வாழ வைக்கும் சென்னையில், எத்தனையோ பிரிவுகள், சாதி, மதம் என அனைத்தும் இருக்கிறது. எவ்வளவு குழப்பங்கள, சலனங்கள், சதிகள் வந்தாலும், வந்த வேகத்தில் சுனாமி போல் சென்றுவிடுமே தவிர, இங்கேயே தங்கியிருந்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதில்லை என்பதுதான் பொதுவான வரலாறு. விதிவிலக்குகள் உண்டு. ஆனால், அவை விதிகளாக மாறிவிடாது.




இது இன்று நேற்றல்ல... ஆண்டாண்டு காலமாக, சென்னையில் பெரிய அளவு சாதிச் சண்டைகளோ, மதச் சண்டைகளோ வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. ஏன் தெரியுமா... சென்னை மாநகரமே, ஒரே குலம், ஒரே இனம், ஒரே மதம் என்றவகையில், பிழைக்கத் தெரிந்தவன் பிழைப்பான், மற்றவனும் வாழ்வான் மற்றவரின் தயவில் என்றவகையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. எனவே, சென்னை எப்போதுமே, அங்கு வாழ்பவர்களுக்கு பெஸ்ட் ப்ளேஸ், இன்னும் சொல்லப்போனால், செல்லப்பிள்ளை என்று சொல்வதில் எள்ளளவும் தவறில்லை.