நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும், நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது பித்ரு தோஷம். இந்த தோஷம் நீங்கிட திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி என்னும் கிராமத்தில் இருக்கும் விசுவாமித்திர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலச யாகம் செய்ய வேண்டும். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் இந்தத் திருத்தலம். நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆவதாகக் கூறப்படுகிறது.




ஒரு நாட்டின் மன்னனாக இருந்தவன் கவுசிகன். இவர் ஒரு முறை வேட்டையாடுவதற்காக படை பரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிஷ்டரின் ஆசிரமத்தின் பக்கமாக வந்தான். தன் ஆசிரமம் பக்கமாக வந்த கவுசிக மன்னனையும் படை பரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிஷ்டர், கவுசிகனிடம் உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன். நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்றார். அதற்கு கவுசிகன், ‘எனக்கும் என் படையினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது. காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் உங்களால் எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்து பரிமாற முடியும்?’ என்று கேட்டான். முடியும் மன்னா, நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்றுநேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகிவிடும் என்றார் வசிஷ்டர்.




ஆசிரமத்தின் பின்புறம் சென்று தொழுவத்தில் கட்டி வைத்திருந்த கோமாதாவிடம், வந்திருக்கும் அனைவருக்கும் உணவு சமைத்து அதைப் பணிப்பெண்கள் மூலம் பரிமாறு’’ எனச் சொன்னதும், அதன்படி சற்று நேரத்தில் உணவும், பரிமாற பணிப் பெண்களும் தயாராயினர். இதைக் கவனித்துக் கொண்டிருந்த கெளசிகர், கேட்டதைத் தரும் அட்சயப் பாத்திரமான இப்படிப்பட்ட கோமாதா முனிவரான உம்மிடம் இருக்கக்கூடாது, நாட்டின் மன்னனான என்னிடம்தான் இருக்க வேண்டும் எனச்சொல்லி கோமாதாவைக் கேட்டதற்கு, தரமறுத்தார் வசிஸ்டர். படையினரிடம் சொல்லி கோமாதாவை இழுத்து வரச் சொன்னார். படையினர் கட்டி வைக்கப்பட்டிருந்த கோமாதாவை இழுத்ததும், படையினர் எரிந்து போக சாபம் கொடுக்கிறார் வசிஸ்டர். படைபலன் இன்றி நாட்டிற்கு போனால் இனிமேலும் நான் மன்னன் இல்லை எனச் சொல்லிவிட்டு நாட்டிற்குப் போகாமல் வசிஸ்டரைப்போல சக்தி பெற வேண்டுமென்று தவமிருக்கத் தொடங்குகிறார் விஸ்வாமித்திரர்.




தவத்தின் பலனாக சிறந்த ஆற்றல் பெற்றிருந்த விசுவாமித்திரர், ஒரு முறை திரிசங்குவுக்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் அனைத்து தவ பலன்கைளயும் இழந்து விட்டார். மீண்டும் தவ ஆற்றலைப் பெறுவதற்காக யாகம் செய்ய நினைத்தார். யாகம் செய்ய அவர் தேர்வு செய்த இடம்தான் விஜயாபதி. விஜயாபதி கடற்கரைக்கு அருகில் லிங்கத் திருமேனியாக இறைவனையும், இறைவியையும் உருவாக்கி ஓமகுண்டம் வளர்த்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொல்லை கொடுத்தாள்.தாடகையை அழிக்க ராமர், லெட்சுமணரை அழைக்கிறார் விஸ்வாமித்ரர். ராமர் தாடகையை மீது அம்பு எய்ததும் அருகிலுள்ள மலையில் விழுந்து மடிந்துவிடுகிறாள் தாடகை.




பின், யாகம் தொடர்ந்து செய்கிறார். அதோடு தாடகையை அழித்ததால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷத்தையும் போக்குகிறார். யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விஸ்வாமித்திர மகரிஷிக்கு தம்பதி சமேதராகக் காட்சி கொடுத்து இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய், காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிஸ்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர் பட்டமான பிரம்மரிஷி பட்டத்தைப் பெறுவாய், வசிஸ்டரே உனக்கு குருவானவர். இந்த இடத்திற்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை எனச் சொல்லி மறைந்தார்களாம். விஸ்வாமித்ரரும் காசிக்குச் சென்று தன் குருவானவரான வசிஸ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார்.




விசுவாமித்திர மகரிஷி கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் .விசுவாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால், இங்குள்ள விநாயகரை வழிபட்டு விட்டுத் தான் யாகம் செய்துள்ளார். அதனால் இங்குள்ள விநாயகருக்கு ஓமகுண்ட கணபதி’ என்று பெயர். கணபதி சன்னிதிக்கு வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம், தற்போது கிணறு போல காட்சியளிக்கிறது.




விசுவாமித்திரர் சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று யாகமும், மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தியானத்தையும் தொடங்கினாராம். விசுவாமித்திரரின் நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும், பவுர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அர்ச்சனையும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்களின் சாபம் நீங்குவதாகச் சொல்லப்படுகிறது. கடலில் நீராடி, ஈர ஆடையுடனே ஓமகுண்ட கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து, விசுவாமித்திரருக்கு சிவப்பு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அவருக்கு உகந்த ரோஜாப்பூ மாலை சாத்தி, 11 நெய் தீபமேற்றி, விசுவாமித்திரர் சன்னிதியை மூன்று முறைச் சுற்றி வந்து, மறுபடியும் ஒரு முறை விசுவாமித்திரரை தரிசனம் செய்துவிட்டுச் சென்றால் சில நாட்களிலேயே முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் பலன் பெற்றவர்கள்.