சித்திரைத் திருவிழா 2024


மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று 5ஆம் நாள் நிகழ்வாக அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பாக பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து மதிச்சியம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் இரவு வரை அண்ணாநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் விடிய விடிய எழுந்தருளி வண்டியூர் வீர ராகவபெருமாள் கோவிலுக்கு சென்றடைந்தார்.  இதனையடுத்து இன்று காலை வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பின் சைத்திரயோபசாரம் நடந்தது.


சாப விமோசனம்:


பின்னர் ஏகாந்த சேவையில் உலர்திராட்சை மாலை, பாதாம் பருப்பு மாலை மற்றும் தாமரை மாலை ஆகிய மாலைகளை அணிந்தபடி எழுந்தருளிய கள்ளழகர் வீர ராகவ பெருமாள் கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில் புறப்பாடகிய கள்ளழகர் பல்வேறு பகுதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வண்டியூர் பகுதியில்  வைகையாற்றின் மையத்தில் உள்ள தேனூர் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேனூர் மண்டகபடியில் எழுந்தருளினார்.


ஆண்டுதோறும் மண்டகபடியின்  கீழ் பகுதியிலயே சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றுவந்த நிலையில் 62ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக தேனூர் மண்டபத்தில்  உள்பகுதியில் கள்ளழகர் எழுந்திருனார்.


மண்டூகமான நீ தவளையாகவே போ


இதனைத்தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் தேனூர் மண்டகப்படி முன்பாக திருக்குளம் போன்ற வடிவமைக்கப்பட்டு நீர் நீரப்பபட்டு பூக்கள் மற்றும் மண்டூக முனிவரின் சிலை வைக்கப்பட்டு நாரை ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சேஷ வாகனத்தில் இருந்து  சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள் நாரைக்கு  முக்தி அளிக்கும் வகையில் அங்கு கட்டப்பட்டிருந்த நாரை பூஜைக்குப் பின்னர் பறக்கவிடப்பட்டது.


பின்னர் மண்டூக முனிவரின் உருவ மண் சிலைக்கு நம்மாழ்வார் திருமொழி பாடல் பாடப்பட்டு சாப விமோசனம் வழங்கும் பூஜை நடத்தப்பட்டது. சுதபஸ் என்ற மகரிஷி சுந்தரராஜ பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்ததால்  சுதபஸ் முனிவரை காண துர்வாச முனிவர் வந்தபோது தவத்தில் இருந்ததால் சுதபஸ் முனிவர் துர்வாசரை கவனிக்காமலும், சரியாக உபசரிக்கவில்லை என்பதாலும்  கோபமுற்ற துர்வாச முனிவர் கோபம் மரியாதை தெரியாத மண்டூகமான நீ தவளையாகவே போ என சாபமிட்டார்.


சாமி தரிசனம்:


இதனால் சாபம் பெற்ற சுதபஸ் முனிவர் தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என துர்வாச முனிவரிடம் வேண்டியபோது  'வேதவதி' என்ற வைகையாற்றில் தவம் செய்தால் அழகர்கோவிலில் இருந்து சுந்தர ராஜ பெருமாள் வரும் போது சாப விமோசனம் கிடைக்கும் என்ற வரலாற்றின் அடிப்படையில்  இந்த மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வானது நடைபெற்றது, என்பது குறிப்பிடத்தக்கது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு.


இதனையடுத்து தேனூர் மண்டகப்படியை வலம் வந்த கள்ளழகர் அங்கிருந்த புறப்படாகியபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கள்ளழகர் வண்டியூர் அனுமார் கோயிலில் எழுந்தருளி  பின்னர் வைகை வடகரை பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் திருமஞ்சனம் ஆகிய பின்னர் இன்று நள்ளிரவு தொடங்கி விடிய விடிய தசாவதாரம் நிகழ்வு நடைபெறும்.