Vinayagar Chaturthi Naivedyam: இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும். முழு முதற்கடவுளாக இந்து மதத்தினரால் வணங்கப்படுபவர் விநாயகர். அவர் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தி என்ற பெயர்களால் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.


நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி( சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. வழக்கம்போல இந்தாண்டும் விநாயகர் சதர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விநாயகர் சதுர்த்திக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளிலும் அந்தந்த மாநில காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


விநாயகருக்கு நைவேத்தியங்கள்:


இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு என்னென்ன நைவேத்தியங்கள் படைக்கலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.



  • விநாயகர் சிலையை அல்லது விநாயகர் படத்தின் முன்பு வாழை இலையை வைக்க வேண்டும்.

  • வாழை இலையில் எத்தனை வகையான பழங்கள் வைக்க முடியுமோ அத்தனை வகை பழங்கள் வைக்க வேண்டும்

  • ஏராளமான வகை பழங்கள் வைக்க முடியாதவர்கள் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வாங்கி வைத்தாலே போதும்.

  • விநாயகருக்கு பிடித்தமான உணவாக கொழுக்கட்டையும், சுண்டலும் முதன்மையானதாக உள்ளது.

  • கொழுக்கட்டை, சுண்டல் கட்டாயமாக இடம்பெறுமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இதனுடன் சேர்ந்து லட்டு, அவல், பொரி. மோதகம், பால், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை வைக்கலாம்.

  • பெரியளவு பலகாரங்களை வைக்க முடியாதவர்கள் பால், பழம், தேன், சர்க்கரை பாகினால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பலகாரத்தை வைத்தாலே போதும்.


எருக்கம் பூ மாலை, அருகம்புல் மாலை:

வீட்டில் வைத்து வணங்கும் விநாயகருக்கு எருக்கம் பூ மாலை, அருகம்புல் மாலை அணிவிப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. விநாயகருக்கு மிகவும் உகந்த அர்ச்சனை பொருட்களாக எருக்கம் பூவும், அருகம்புல்லும் உள்ளது.

விநாயகர் மிக எளிமையாக காட்சி தருவதுடன் மட்டுமில்லாமல் மிகவும் எளிமையான கடவுளாகவும் போற்றப்படுகிறார். இதனால், பெரியளவில் விநாயகர் சதுர்த்திக்கு அவருக்கு பூஜைகள் செய்யாவிட்டாலும், பக்தர்கள் தங்களால் இயன்றளவு நைவேத்தியங்களை இட்டு வழிபாடு செய்தாலே போதும். எந்தவொரு படையலும் இட்டு வழிபாடு செய்ய இயலாத பக்தர்கள் விநாயகரை வணங்கினாலே போதும்.