வேளாங்கண்ணி தேவாலயம் கொடியேற்றம் பெருவிழா..


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படுகிறது. இப்பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


தஞ்சை மறைமாவட்ட ஆயர் டி. சகாயராஜ் கொடியை புனிதம் செய்து, ஏற்றி வைக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவைப் பாதை நிகழ்ச்சி செப்டம்பர் 6-ஆம் தேதியும், சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், அலங்காரத் தேர் பவனியும் செப். 7-ஆம் தேதியும், நடைபெறுகின்றது. இறுதியாக செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 6 மணியளவில் கொடியிறக்கத்துடன்விழா நிறைவடைகிறது.




மேலும், விழா நாள்களில் பேராலயம், விண்மீன் கோயில், பேராலய கீழ்கோயில், பேராலய மேல் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கொங்கணி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். குறிப்பாக திருத்தல கலையரங்கில் நாள்தோறும் நற்செய்தியின் அடிப்படையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 


இந்தப் பெரும் விழாவிற்கு இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல,  பல்வேறு பல்வேறு மாநிலங்கள் நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி தேவாலய கொடியேற்ற பெருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். 




ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெறும் பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள். இதனால் இந்த திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதும் ,3000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதும் வழக்கம். 


இன்று மாலை நடைபெற உள்ள கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அதிகாலையில் இருந்தே தேவாலயம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 


வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு  போக்குவரத்து வசதி:


வேளாங்கண்ணி திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பர் என்பதால், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே சார்பில் சென்னை, மும்பை, கோவா, திருவனந்தபுரம், எர்ணாக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.


வேளாங்கண்ணி பெருவிழா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்  ஆகாஷ் தலைமையில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் 3 முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பால மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மேற்பார்வையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாங்கண்ணி பேராலயத்தின் பல பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீஸார், கடலோர காவல் குழும போலீஸார், தன்னார்வலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


குறிப்பாக வேளாங்கண்ணி பேராலய கொடியேற்ற விழாவை முன்னிட்டு 1,700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றசம்பவங்களை தடுக்க 18 சிறப்பு தனிப்படை அமைப்பு, 360 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.