முழு முதற்கடவுள் விநாயகப் பெருமான் ஆவார்.  எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு தொடங்குவது இந்துக்களின் வழக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.


விநாயகர் சதுர்த்தி:


நடப்பாண்டில் வரும் 17-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்ததி ஆகும். தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தியை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள்.


சிறிய அளவு முதல் பெரியளவு வரை விநாயகர் சிலையை வைத்து வணங்கி அவற்றை கரைப்பது வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று எவ்வாறு வழிபட வேண்டும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.


வழிபடுவது எப்படி?


விநாயகர் சதுர்த்தியன்று நாம் வழிபடுவதற்கு தயாராக வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டை விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினமே சுத்தம் செய்து கொள்வது மிகவும் சிறப்பானது ஆகும்.


விநாயகர் சதுர்த்தியன்று வழிபாட்டில் ஈடுபடுவதற்கு முன்பு அதிகாலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும். வீட்டின் முன்பு வண்ண கோலமிட வேண்டும், முடிந்தால் வீட்டின் உள்ளே பூஜையறையிலும் கோலமிடுவது உகந்தது.


பின்னர், பூஜையறையில் தலை வாழை இலை போடுங்கள். வாழையிலையின் நுனி வடக்கு பார்த்து இருக்கட்டும். அதன் மீது பச்சரிச்சி பரப்ப வேண்டும். பரப்பிய பச்சரிசி மீது நீங்கள் வாங்கி வந்துள்ள புதிய களிமண் சிலையை வைக்க வேண்டும்.


அந்த களிமண் சிலை மீது சந்தனம், குங்குமம் திலகமிட வேண்டும். புதியதாக வாங்கி வந்த விநாயகர் சிலைக்கு அவருக்கு மிகவும் பிடித்த அருகம்புல், எருக்கம்பூ மாலை போன்றவற்றை அணிவிக்க வேண்டும். இப்போது, மற்றொரு வாழை இலையை விநாயகர் சிலை முன்பு இட வேண்டும்.


வினைகள் தீரும்:


அந்த இலையில் விநாயகர் சதுர்த்திக்காக  தயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள், பழங்கள், தேங்காய் போன்றவற்றை வைத்து படைக்க வேண்டும். அந்த இலையில் அவல், பொரி, கடலை போன்றவற்றையும் வைக்க வேண்டும். இதையடுத்து, விளக்கேற்றி விநாயகப்பெருமானை மனதார வணங்க வேண்டும்.


விநாயகப் பெருமானை வணங்கினால் நம்மைச் சுற்றியுள்ள வினைகள் அனைத்தும் நீங்கும். விநாயகர் சதுர்த்தியன்று கோயில்களில் கோலாகலமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் மிகச்சிறப்பு ஆகும்.


மேலும் படிக்க: Tiruvannamalai Temple: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை - வசூல் எவ்வளவு தெரியுமா..?


மேலும் படிக்க: மதுரை கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா; ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட 500 கிலோ மலர் - கோவிந்தா முழக்கத்தில் பக்தர்கள்